இந்தியா தீவிரவாத சித்தாந்தத்துடன் பேரழிவை நோக்கி செல்கிறது – இம்ரான் கான்

உலகில் எங்கெல்லாம் மக்கள் ஒதுக்கப்படுகிறார்களோ அங்கு தீவிரவாதம் உருவாகும் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
ஆசாத் காஷ்மீர் சட்டமன்றத்தில் இன்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ‘காஷ்மீர் விவகாரத்தில் நரேந்திர மோடி பெரிய தவறை செய்து கொண்டிருக்கிறார்.
மோடி தனது இறுதி ஆட்டத்தை ஆடிக் கொண்டிருக்கிறார். ஆனால், அதற்கு இந்தியா பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும்.
18 கோடி முஸ்லிம்கள் இந்தியாவில் அச்சுறுத்தலோடு வாழ்கிறார்கள். இந்த முடிவு இறுதியில் பின்னடைவையே ஏற்படுத்தும். உலகில் எங்கெல்லாம் மக்கள் ஒதுக்கப்படுகிறார்களோ அங்கு தீவிரவாதம் உருவாகும்.
ஆர்எஸ்எஸ்ஸின் குண்டர்கள் மக்களை கொல்கிறார்கள், நீதிபதிகளை மிரட்டுகிறார்கள். இதனைத்தான் நாஜிக்கள் செய்தார்கள். அவர்களின் மேலாதிக்கத்தை எதிர்த்தவர்களை தேசத்துரோகி என்றார்கள்.
ஆர்எஸ்எஸ் சித்தாந்தமானது, அப்படியே நாஜிக்களின் சித்தாந்தம் போல் உள்ளது என்பதை இந்த உலகத்திற்கு தெரிய வைக்க வேண்டும்.
இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகு, இனஅழிப்பு இனி நடக்காது என்று கூட்டாக முடிவெடுக்கப்பட்டது. ஆனால், ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் அந்த நிலைக்கும் மீண்டும் இட்டுச் செல்கிறது.
இந்தியாவில் நீதிபதிகள் அச்சத்தில் இருக்கிறார்கள். ஊடகங்கள் முடக்கப்படுகின்றன. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேச அஞ்சுகிறார்கள்.
இந்த முடிவால் அதிக அழிவு இந்தியாவுக்கே. அரசமைப்பை சேதப்படுத்தி உச்சநீதிமன்ற மற்றும் ஜம்மு காஷ்மீர் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக செயல்பட்டிருக்கிறார்கள்.
நாட்டின் சட்டம் ஒழுங்கு மற்றும் மனித உரிமைகள் ஒடுக்கப்படும்போது, குடியரசு அதன் ஸ்திரத்தன்மையை இழக்கும்.
இந்திய அமைச்சர்கள் எப்படி பேசுகிறார்கள் என்று பாருங்கள். அவர்கள் தீவிரவாத மனநிலையை கொண்டிருக்கிறார்கள்’ என அவர் இதன்போது குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.