இந்தியா முழுவதும் 16ஆம் திகதி முதல் தடுப்பூசி போடும் திட்டம் ஆரம்பம்!

நாடு முழுவதும் எதிர்வரும் 16ஆம் திகதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் ஆரம்பிக்கப்படும் என மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
முதற்கட்டமாக சுகாதார ஊழியர்கள், முன்களப் பணியாளர்கள் ஆகியோருக்கு தடுப்பூசி போடப்படும் எனவும் முதற்கட்டத்தில் மூன்று கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.
இதன்பின்னர் 50 வயதிற்கு மேற்பட்டோருக்கும், 50 வயதிற்கு கீழ் உள்ள நீரிழிவு நோய் போன்று பெரும் உடல்நலக் குறைபாடு உள்ளோருக்கும் தடுப்பூசி போடப்படும் எனவும், இந்த இரண்டாம் கட்டத்தில் 27 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொவாக்சின் மற்றும் கொவிஷீல்ட் ஆகிய இரண்டு தடுப்பூசிகளை மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பு கடந்த இரண்டாம் திகதி அனுமதி வழங்கியது.
இதையடுத்து அடுத்தடுத்து இரு முறை கொரோனா தடுப்பூசிக்கான ஒத்திகை, நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் நடைபெற்றதுடன் கொரோனா தடுப்பூசியை நாடு முழுவதும் விநியோகிக்கும் திட்டமும் முன்னெடுக்கப்பட்டது.
எனினும், விநியோகப் பணிகளில் இரு நாட்கள் காலதாமதம் ஏற்பட்டதால், முதலில் திட்டமிட்டபடி 13ஆம் திகதி கொரோனா தடுப்பூசியை பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில், தடுப்பூசி போடும் திட்டம் ஜனவரி 16ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.