இந்திய மீனவர்கள் வலைகளை அறுத்து அட்டூழியத்தில் ஈடுபட்டனர்- பருத்தித்துறை மீனவர் குற்றச்சாட்டு
In இலங்கை January 20, 2021 8:26 am GMT 0 Comments 1387 by : Yuganthini

வடமராட்சி கடற்பரப்பில் அத்துமீறி தொழில் ஈடுபட்டுள்ள இந்திய மீனவர்கள், பருத்தித்துறை மீனவரின் வலைகளை அறுத்து அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இன்று (புதன்கிழமை) அதிகாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தினால் பாதிக்கப்பட்ட மீனவரான சுப்பர்மடம் மீனவர் சங்கத் தலைவர் தே.தேவதாசன் தெரிவித்துள்ளதாவது, “பருத்தித்துறை சுப்பர்மடம்’ இறங்குதுறையிலிருந்து 15 கிலோ மீற்றர் தொலைவில் தொழிலுக்காக இன்று அதிகாலை படகில் சென்றேன்.
அங்கு இந்திய மீனவர்களின் 4 படகுகள் தொழிலில் ஈடுபட்டிருந்ததுடன், எனது 20 வலைகளை அவர்கள் அறுத்து எடுத்திருந்தனர்.
வலைகளைத் தருமாறு கேட்டேன். இந்திய மீனவர்கள் கற்களால் எனது படகை நோக்கி எறிந்தனர். தமக்கு அருகே வந்தால் தாக்குதல் நடத்துவோம் என்று இந்திய மீனவர்கள் மிரட்டினார்கள்.
மேலும், அவர்கள் முகத்தை தெரியாதவாறு துணி கட்டியிருந்ததுடன், கொட்டன்களை வைத்திருந்தனர். பல மணிநேரம் வலைகளைக் கேட்டு காத்திருந்துவிட்டு, ஏமாற்றத்துடன் கரை திரும்பியுள்ளேன்.
சுமார் 3 இலட்சம் ரூபாய் வலைகளை இழந்துள்ளேன்’ என கவலை வெளியிட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மீனவர், பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.