இந்திய விவசாயிகளுக்கு ஆதரவாக மலையகத்தில் போராட்டம்
In இலங்கை January 26, 2021 6:17 am GMT 0 Comments 1329 by : Yuganthini
இந்தியாவில் விவசாயிகளால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தை ஆதரித்து மலையகத்தில் ஹட்டன்- மல்லியப்பு சந்தியில் மலையக சிவில் அமைப்புகள் இன்று (செவ்வாய்க்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்டன.
மலையக மக்களின் காணி உரிமைக்கான இயக்கம் மற்றும் மொன்லார் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த இப்போராட்டத்தில் பங்கேற்றவர்கள், இந்திய விவசாயிகளின் போராட்டத்தை ஆதரிக்கும் பதாதைகளை ஏந்தியிருந்தனர். இதில் இலங்கையில் அதானி நிறுவனம், ஆழமாக காலூன்றுவதை கண்டிக்கும் பதாதைகளும் இருந்தன.
இந்திய விவசாயிகளின் நியாயமான கோரிக்கையை அந்நாட்டு அரசாங்கம் மீள்பரிசீலனை செய்யவேண்டும் எனவும் சிறு விவசாயிகளின் உரிமைகளையும் சலுகைகளையும் நசுக்குவதில் இருந்து அவர்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தி 60 நாட்கள் நடைபெறும் தொடர் போராட்டத்தில் இதுவரை 66 விவசாயிகள் உயிரிழந்துள்ளதற்கு இதன்போது அனுதாபம் தெரிவிக்கப்பட்டதுடன், இந்திய மத்திய அரசுக்கு கண்டனமும் வெளியிடப்பட்டது.
இந்தியாவின் அதானி கம்பனி தற்போது இலங்கையின் கிழக்கு முனையத்தை பெற்றுக்கொள்வது போல ஏனைய துறைகளின் நிலங்களையும் பெறுவதற்கு திரைமறைவில் சதி நடப்பதாகவும் அதனால் எதிர்காலத்தில் பெருந்தோட்ட நிலங்களை அழிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர்.
இந்திய நிறுவனமான அதானியின் செயற்பாடுகளை இந்திய பிரஜைகளே கண்டித்து வெறுக்கும் நிலையில், அந்நிறுவனம் இலங்கையில் தனது செயற்பாடுகளை முன்னெடுப்பதை அனுமதிக்க முடியாது, இதற்கு இலங்கை அரசு அனுமதி வழங்கவும் கூடாது எனவும் போராட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.