முதற்தர வீரர் ஃபெடரை வீழ்த்தி ஜுன் மார்ட்டின் வெற்றி!
In விளையாட்டு March 19, 2018 4:42 am GMT 0 Comments 1508 by : Velauthapillai Kapilan
பி.என்.பி பரிபாஸ் (BNP Paribas) பகிரங்க டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில், உலகின் முதற்தர டென்னிஸ் வீரர் ரொஜர் ஃபெடரரை வீழ்த்தி, அர்ஜென்டினா வீரர் ஜுன் மார்ட்டின் (Juan Martin) வெற்றி பெற்றுள்ளார்.
அமெரிக்காவின் இந்தியன் வேல்ஸில் நடைபெற்று வரும் பி.என்.பி. பரிபாஸ் (BNP Paribas) பகிரங்க டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டி நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது.
இதில் ஆர்ஜென்டினா வீரர் ஜுன் மார்ட்டின், உலகின் முன்னணி வீரர் ரெஜர் ஃபெடரர் (Roger Federer) ஐ எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் இருநாட்டு வீரர்களும் மூன்று மணி நேரம் கடுமையாகப் போராடிய நிலையில் ஜுன் மார்ட்டின் 6-4, 6-7(8), 7-6(2) என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று சிறந்த வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
தனக்கு மறக்க முடியாத ஒரு போட்டியாக இப்போட்டி அமைந்திருந்ததாக குறிப்பிட்டுள்ள ஜுன் மார்ட்டின், பல இறுதிப்போட்டிகளில் போராடி தோல்விகண்டதாக போட்டியின் பின்னர் கருத்துத் தெரிவித்துள்ளார். அந்தவகையில் ரோஜர் பெடரரை வீழ்த்தி இப்போட்டியில் வெற்றிபெற்றமை மிகவும் மகிழ்ச்சியான தருணமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அவுஸ்ரேலிய பகிரங்க டென்னிஸில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றமை உள்ளடங்கலாக, இவ்வருடத்தில் மொத்தமாக 17 வெற்றிகளை பெடரர் பதிவுசெய்துள்ளார். இந்நிலையில், அர்ஜென்டினா வீரர் ஜுன் மார்ட்டினிடம் தோல்வியடைந்தமை அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இது, இவ்வருடத்தில் அவர் பெற்ற முதலாவது தோல்வியாகும்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.