இந்தோனேசியாவில் நான்கு கிறிஸ்தவர்கள் ஐ.எஸ்-தொடர்புடைய போராளிகளால் படுகொலை!
In உலகம் November 29, 2020 6:24 am GMT 0 Comments 1430 by : Jeyachandran Vithushan

உலகின் மிகப்பெரிய முஸ்லிம் பெரும்பான்மை நாடான இந்தோனேஷியாவில் நால்வரை படுகொலை செய்த நபர்களை தேடும் பணிகளை அந் நாட்டு பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
சுலவேசி தீவில் ஐ.எஸ் பயங்கரவாத குழுவுடன் தொடர்புடைய பத்து தீவிரவாதிகள் வெள்ளிக்கிழமை துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் தலையை துண்டித்தும் கழுத்தை அறுத்தும் நான்கு பேரை கொலை செய்துள்ளனர்.
மத்திய சுலவேசி மாகாணத்தில் உள்ள லெம்பன்டோங்கோவா கிராமத்தில் வெள்ளிக்கிழமை காலை பதுங்கியிருந்த தீவிரவாதிகள் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் தாக்குதல் நடத்தியவர்கள் பல வீடுகளை எரித்தும் உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தாக்குதலை மேற்கொண்ட நபர்கள் எவரும் இதுவரை கைதுசெய்யப்படாத நிலையில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த தாக்குதல் இந்தோனேசியாவில் உள்ள கிறிஸ்தவ சிறுபான்மையினருக்கு எதிரான மற்றொரு தீவிரமான தாக்குதல் என்று மனித உரிமைகள் கண்காணிப்பக ஆராய்ச்சியாளர் ஆண்ட்ரியாஸ் ஹர்சனோ சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.