இந்தோனேஷியாவில் இஸ்லாமிய பாதுகாப்பு முன்னணியை சேர்ந்த ஆறு பேரைக் சுட்டுக்கொன்ற பொலிஸார்!

இந்தோனேஷியாவில் இஸ்லாமிய பாதுகாப்பு முன்னணியை சேர்ந்த ஆறு பேர், பொலிஸாரின் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.
நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற இந்த தாக்குதலில் அந்த அமைப்பை சேர்ந்த மேலும் 4பேர் காயமடைந்துள்ளதாக ஜகார்த்தா பொலிஸ் துறை தலைவர் முகமது ஃபாதில் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து அவர் விபரிக்கையில், ‘இஸ்லாமிய பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்தவரும், தீவிரவாத கருத்துகளைப் போதிப்பவருமான ரைசிக் ஷிகாப் 3 ஆண்டு நாடு கடத்தப்பட்ட நிலையில், கடந்த மாதம் தடை முடிந்து சவூதி அரேபியாவில் இருந்து மீண்டும் இந்தோனேஷியாதிரும்பினார்.
இதனிடையவே அவர் கொவிட்-19 விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் ஜகார்த்தா பொலிஸாரிடம் நேரில் விளக்கமளிக்க திங்கட்கிழமை ஷிகாப் காரில் சென்றார். அவரது அமைப்பைச் சேர்ந்த ஆதரவாளர்கள் 10 பேர் மற்றொரு காரில் பாதுகாப்புக்காக பின்னால் சென்றனர். இதையடுத்து, பொலிஸார் சந்தேகத்தின் பேரில் அவர்களைப் பின் தொடர்ந்து கண்காணித்தனர்.
பொலிஸார் பின்தொடர்வதை அறிந்த அவர்கள், ஒருகட்டத்தில் காரைவிட்டு இறங்கி துப்பாக்கி மற்றும் வாள்கள் மூலம் பொலிஸாரை தாக்க முற்பட்டனர். இதையடுத்து, பொலிஸார் பதிலடித் தாக்குதல் நடத்தினர். இதன்போதே அவர்கள் தாக்குதலுக்க உள்ளாகினர்’ என கூறினார்.
இந்தோனேஷியாவில் இஸ்லாமிய பாதுகாப்பு முன்னணி அரசியல் அமைப்பாகவும் செயற்பட்டு வந்தபோதிலும் பிற மதக் குழுக்கள், மேற்கத்திய நாடுகளின் தூதரகங்கள், இரவு விடுதிகள் உள்ளிட்ட இடங்களைத் தாக்குவது, சூறையாடுவது என வன்முறையில் ஈடுபடும் ஆயுதக் குழுவினரும் அதில் உள்ளனர். அந்நாட்டில் இஸ்லாமிய சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்பதே அந்த அமைப்பின் முக்கிய கொள்கையாக உள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.