இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்த நடவடிக்கை – முன்னாள் ஜனாதிபதி
In இலங்கை April 27, 2019 3:49 am GMT 0 Comments 2228 by : Dhackshala
நாட்டின் அனைத்து பிரதேச செயலகத்திலும் அடுத்தவாரம் முதல் சமாதானக் குழுக்கள் ஊடாக இனங்களுக்கிடையில் ஐக்கியத்துக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க எதிர்ப்பார்த்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்தார்.
பேராயர், கர்தினால் மெல்கம் ரன்ஜித் ஆண்டகையை நேற்று (வெள்ளிக்கிழமை) சந்தித்ததையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், “நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சம்பவங்களானது மிகவும் கவலையளிக்கிறது. நடக்கக்கூடாத ஒன்று நடந்துள்ளது.
கடந்த நான்கு வருடங்களாக நாம் மிகவும் கஷ்டப்பட்டு கட்டியெழுப்பிய, இனங்களுக்கிடையிலான ஐக்கியமானது, இந்தச் சம்பவத்தையடுத்து தற்போது பின்னோக்கி நகர்ந்துள்ளது. ஐக்கியத்தை ஏற்படுத்த அரசாங்கத்தின் பல தலைவர்கள் எமக்கு ஒத்துழைப்புக்களை வழங்கியிருந்தார்கள்.
இந்நிலையில், நாம் இந்தச் செயற்பாட்டை மீண்டும் ஆரம்பிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. அனைத்து பிரதேச செயலகப் பிரிவுகளிலும் சமாதானக் குழுக்கள் ஊடாக, இந்த ஐக்கியத்துக்கான நடவடிக்கையை ஆரம்பிக்க எதிர்ப்பார்த்துள்ளோம். இதில் மதத்தலைவர்கள், பொலிஸ் பிரதானிகள், சிவில் சமூக அமைப்பினர் மற்றும் அரசியல்வாதிகளை இணைத்துக்கொள்ளவுள்ளோம்.
தற்போதும் இவ்வாறான குழுக்கள் பெயரளவில் செயற்பட்டுக்கொண்டிருந்தாலும், இம்முறை இவற்றை பலப்படுத்தி அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள நாம் எதிர்ப்பார்த்துள்ளோம். இந்தச் செயற்பாட்டை நாம் அடுத்தவாரம் முதல் ஆரம்பிப்போம்” என மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.