இனங்களை இலக்குவைத்து மேற்கொள்ளும் நடவடிக்கைகளை அனுமதிக்கமாட்டோம்- சஜித்
இனங்களை இலக்குவைத்து மேற்கொள்ளும் நடவடிக்கைகளை நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என எதிர்ப்போம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அத்துடன், அனைத்து இன மக்களதும் மத உரிமைகளை பாதுகாப்பதன் மூலமே நாட்டைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என அவ்ர சுட்டிக்காட்டியுள்ளார்.
கொரோனா தொற்றினால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை எரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியினால் இன்று பொரளையில் நடத்தப்பட்ட அமைதிப் போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “ஒருவர் மரணித்தால் அந்த நபரின் இறுதிச் சடங்கை அவர்களின் விருப்பத்தின்பேரில், அவர்களின் மத கலாசார அடிப்படையில் மேற்கொள்வது எமது நாட்டில் அனைத்து மதத்தவர்களுக்கும் இருக்கும் உரிமையாகும்.
தற்போது அரசாங்கம் விஞ்ஞானத்தை மறந்து சாஸ்திரத்தை நம்ப ஆரம்பித்திருக்கின்றது. இது பாரிய பேரழிவாகும். இதற்குப் பிரதான காரணமாக இருப்பது, விஞ்ஞானம் தோல்வியுற்று, பொய், ஏமாற்று வெற்றிபெற்றிருப்பதாகும்.
விசேடமாக பெளத்தர்களுக்கு அவர்களின் இறுதிக் கிரியையை மேற்கொள்ளும்போது கடைப்பிடிக்கும் மத வழிபாடுகளை மேற்கொள்ள அனுமதிக்கவேண்டும். அதேபோன்று ஏனைய மதத்தவர்களின் மத கலாசாரத்துக்கும் இடமளிக்கவேண்டும்.
கொரோனா தொடர்பான அனைத்து விடயங்களையும் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டலின் பிரகாரம் மேற்கொள்வதாகத் தெரிவிக்கும் அரசாங்கம் சடலங்களை அடக்கம் செய்வதில் மாத்திரம் அதன் வழிகாட்டலைப் பின்பற்றாதது ஏன்?
நாட்டின் நல்லிணக்கம், ஒருமைப்பாடு பாதுகாக்கப்படுவது, அனைத்து இன மக்களை ஒன்றிணைத்துச் செல்வதன் மூலமாகும். அங்குதான் நாட்டின் தேசிய பாதுகாப்பு, சுயாதீனம் பாதுகாக்கப்படுகின்றது.
எனவே, அரசாங்கம் இன, மத பேதங்கள் ஏற்படாமல் நாட்டு மக்களை மீட்டுக்கொள்ள வேண்டும். அதற்காக விஞ்ஞான ரீதியிலான தீர்மானங்களுக்கு முன்னுரிமை வழங்கி சாஸ்திரங்களில் இருந்து விடுபடவேண்டும். ஒரு மதத்துக்கு மாத்திரம் அல்லாது அனைத்து மதங்களின் உரிமையும் பாதிக்கப்படுகின்றது.
இதனால், நீதியான, விஞ்ஞான ரீதியிலான உண்மைக்கு முன்னுரிமை வழங்கி அரசாங்கம் தீர்மானம் எடுக்கவேண்டும். சத்தியத்துக்காக குரல் கொடுக்க நாங்கள் ஒருபோது பின்வாங்கப் போவதில்லை.
நாங்கள் எப்போதும் அடிப்படைவாதம், பயங்கரவாதத்துக்கு எதிராகவே இருக்கின்றோம். இதனால் ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபட்டவர்கள் அதனை திட்டமிட்டவர்கள் அனைவருக்கும் மரண தண்டனை வழங்கவேண்டும் என்றே நாங்கள் தெரிவிக்கின்றோம்.
இவ்வாறான தீர்மானம் எடுப்பதற்கு இந்த அரசாங்கத்துக்கு முதுகெலும்பு இல்லை. அத்துடன், பயங்கரவாதத்தை அழிப்பதாகத் தெரிவித்துக்கொண்டு இனங்களை இலக்குவைத்து மேற்கொள்ளும் நடவடிக்கைகளை நாங்கள் எதிர்ப்போம். அதனை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்” என்று தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.