இனவாத ஆட்சியை ஏற்படுத்த வைத்திய அதிகாரிகள் சங்கம் முயற்சி: ஐ.தே.க சாடல்!
நாட்டில் இனவாத ஆட்சியை மீண்டும் கொண்டு வரும் நோக்கிலேயே வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் செயற்பட்டு வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘சர்வதேச நாடுகளுடன் ஒப்பந்தம் செய்வது கட்டாயமாகும். எமது அரசாங்கம் மாத்திரம் இதனை செய்யவில்லை. முன்னைய அரசாங்கங்கள் அனைத்தும் பல்வேறு நாடுகளுடன் ஒப்பந்தங்களை செய்து வந்துள்ளன. இதன் மூலமாகதான் நாட்டை அபிவிருத்தியின் பால் கொண்டு செல்ல முடியும். இலங்கையின் உற்பத்திகளை வெளிநாட்டு சந்தைக்கு கொண்டு செல்வதற்கு ஒப்பந்தங்கள் செய்தே ஆக வேண்டும்.
இல்லை என்றால் நாம் தனிமைப்பட்டு விடுவோம். இதனால் நாட்டு மக்களே பாதிக்கப்படுவர். இலங்கையானது பல்வேறு நாடுகளுடன் ஒப்பந்தங்கள் செய்துள்ளன. இந்தியா, பாகிஸ்தான், மலேசியா, சிங்கப்பூர், சீன உள்ளிட்ட எமது அன்டைய நாடுகளுடன் ஒப்பந்தங்கள் செய்வதன் மூலம் பல்வேறு இலாபங்களை எம்மால் பெற்றுக்கொள்ள முடியும். மேலும் குறித்த நாடுகளுடன் சீரான நட்புறவை பேணி பாதுகாக்க முடியும்.
சர்வதேச நாடுகளுடனான ஒப்பந்ததின் போது எமக்கு இலாபமும் இருக்கும் நஷ்டமும் இருக்கும். அதனை தவிர்க்க முடியாது. பொதுவாக ஒப்பந்தங்களில் இலாபம், நஷ்டம் ஆகியவற்றை கருத்திற்கொள்ள முடியாது. மத்திய கிழக்கு நாடுகளின் பொருளாதாரத்தின் கேந்திர நிலையமாக டுபாய் இருப்பதனை போன்று ஆசியாவின் பொருளாதார கேந்திர நிலையமாக சிங்கப்பூர் விளங்குகின்றது. ஆகவே அந்த நாட்டுடன் ஒப்பந்தம் செய்வது கட்டாயமாகும்.
இந்த நிலையில் தற்போது சிங்கப்பூருடன் நாம் செய்த ஒப்பந்தை வைத்துக்கொண்டு வேலை நிறுத்த போராட்டத்தில் குதிப்பதற்கு வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் தயாராகி வருகின்றனர். நாட்டின் இனவாத ஆட்சியை மீண்டும் கொண்டு வரும் நோக்கிலேயே வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் இவ்வாறு செயற்பட்டு வருகின்றனர். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும், கோத்தாபய ராஜபக்ஷவையும் ஆட்சிக்கு கொண்டு வரும் நோக்கிலேயே அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் வேலைநிறுத்ததில் ஈடுபட்டு பொதுமக்களின் கழுத்தை நசுக்க பார்கின்றனர்.
பொது மக்களை பணய கைதிகளாக வைத்து போராட்டம் செய்வதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. அத்துடன் இந்த ஒப்பந்ததை வைத்து கொண்டு மக்களின் கவனத்தை திசை திருப்ப பார்கின்றனர். காலி முகத்திடல், இராணுவ முகாம், துறைமுகர் நகர் திட்டத்திற்காக கடற்பரப்பு போன்றவை விற்கப்படும் போது அப்போதைய ஆட்சியில் அமைச்சராக இருந்த பந்துல குணவர்தன போன்றோருக்கு ஞானம் இருக்கவில்லை. ஆனால் எதிர்க்கட்சிக்கு வந்தவுடன் தான் பந்துல குணவர்தன உள்ளிட்ட கூட்டு எதிரணிக்கு ஞானம் பிறந்துள்ளது.
முன்னைய ஆட்சியின் போது நாட்டின் பல இடங்களை நிரந்தரமாக விற்றனர். ஆனால் நாம் அதனை குத்தகைக்கு மாற்றினோம். எனினும் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் நாட்டின் வளம் விற்கப்படுவதற்கு எதிராக பாதெனிய தலைமையிலான வைத்திய சங்கத்தினர் அப்போது போராடவில்லை.
சாதாரண வைத்தியர் ஒருவருக்கு ஒரு இலட்சத்து 67 ஆயிரம் ரூபா சம்பளம் கிடைக்கின்றது. விசேட வைத்திய நிபுணருக்கு 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா சம்பளம் கிடைக்கின்றது. மேலதிக கொடுப்பனவாக 50 ஆயிரம் ரூபா கிடைக்கின்றது. அதற்கு அப்பால் ஐந்து வருடங்களுக்கு வரி தீர்வையற்ற வாகனங்களை கொள்வனவு செய்வதற்கான அனுமதி பத்திரம் வழங்கப்படுகின்றது. ஆகவே இவை அனைத்தும் பொது மக்களின் பணமாகும்.
பொது மக்களின் பணத்தில் சம்பளம் பெற்று பொது மக்களின் கழுத்தில் கத்தி வைக்க பார்கின்றனர். அனைத்து வைத்தியர்களையும் குறை கூற முடியாது. பாதெனிய தலைமையிலான மாபியாவே இவ்வாறு செயற்படுகின்றது. ஆகவே இவ்வாறான போராட்டங்களுக்கு மக்களே பாடம் புகட்ட வேண்டும்’ என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.