இனிமையான பாடல்களால் மனதை வென்ற – கவிஞர் வாலியின் பிறந்ததினம் இன்று!
In சினிமா October 29, 2018 4:01 am GMT 0 Comments 1226 by : Ravivarman

தமிழ்த் திரையுலகில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியவர் கவிஞர் வாலி. அவருடைய 87ஆவது பிறந்தநாளான இன்று சில நினைவுகள்
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ரங்கராஜன் என்ற பெயரில் 1931 ஒக்டோபர் 29ஆம் திகதி பிறந்தவர் கவிஞர் வாலி, 1950ஆம் ஆண்டுகளில் சினிமா பாடல் வாய்ப்புத் தேடி சென்னைக்கு வந்தார். ஓரிரு படங்களுக்கு பாடல் எழுதும் வாய்ப்பை பெற்றிருந்தார். ‘இதயத்தில் நீ, கற்பகம் போன்ற திரைப்படங்களில் பாடல்களை எழுதியபின் எம்ஜிஆரின் கவனத்தை ஈர்த்தார்.
பிறகு நல்லவன் வாழ்வான் தொடங்கி, தெய்வத்தாய், படகோட்டி, எங்க வீட்டுப் பிள்ளை, ஆயிரத்தில் ஒருவன், அன்பே வா உள்பட எம்.ஜி.ஆரின் பல திரைப்படங்களுக்கு பாடல் எழுதும் வாய்ப்புகளைப் பெற்று சிகரத்தை எட்டியவர் வாலி.
இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதனின் நட்பினால், சிவாஜி கணேசனின் படங்களில் வாலிக்கு வாய்ப்பு கிடைத்தது. இருமலர்கள், பேசும் தெய்வம், உயர்ந்த மனிதன் போன்ற படங்களில் வாலி எழுதிய பாடல்கள் பெரிதும் பாராட்டுக்களைப் பெற்றன.
மேலும் பாலசந்தர், ஸ்ரீதர், கே,எஸ்.கோபாலகிருஷ்ணன் போன்ற இயக்குனர்கள் கண்ணதாசனுடன், வாலியின் பாடல்களையும் தங்கள் திரைப்படங்களில் பயன்படுத்தினார்கள்.
ரஜினி, கமல், விஜயகாந்த், பாக்யராஜ், சத்யராஜ் , பிரபு போன்ற பலர் நடித்த திரைப்படங்களில், வாலி எழுதிய பாடல் வரிகளால் உருவான பாடல்கள் இரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்தநிலையில் சிவகார்த்திகேயன் போன்ற மூன்றாம் தலைமுறை நடிகர்களுக்கும் பாடல் எழுதிய வாலியின் கடைசிப் பாடல் காவியத் தலைவன் படத்தில் இடம்பெற்றிருந்தது.
திரைப்பட கதை வசனகர்த்தாவாகவும், நடிகராகவும் திறமையை வெளிப்படுத்திய வாலி, புதுக்கவிதையில் ராமாயணம், மகாபாரதம் உள்பட ஏராளமான புத்தகங்களையும் எழுதியுள்ளார்.
பத்மஸ்ரீ உள்ளிட்ட எண்ணற்ற விருதுகளும் அவருக்கு கிடைத்துள்ளன. உடலால் மறைந்துவிட்டாலும் மனது மறக்காத பாடல்களால், எப்போதும் தமிழ்த் திரை இரசிகர்களிடையே நீங்காத இடம் பெற்றிருக்கின்றார் கவிஞர் வாலி என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.