இன்னும் ஒரு தசாப்தத்திற்கு நாமே நாட்டை ஆள்வோம்: ஐ.தே.க.
எதிர்வரும் பத்து ஆண்டுகளுக்கு நாட்டில் ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியே நீடிக்கும். அதில் எவ்வித மாற்றமும் இல்லை என கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”மாகாண சபைத் தேர்தலை தாமதப்படுத்தாது உடனடியாக நடத்துமாறு ஒன்றிணைந்த எதிரணி கூறி வருகின்றது. அதனையே நாமும் கூறுகின்றோம். தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்பதே எமது விருப்பமும்.
புதிய தேர்தல் முறையில் காணப்படும் சிக்கல்களே இந்த இழுத்தடிப்பு காரணம். எனவே, பழைய முறையிலேனும் தேர்தலை நடத்த வேண்டும்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதை மனதில் கொண்டு, எதிர்வரும் தேர்தல்களிலும் வெற்றிபெறலாம் என்ற எண்ணத்துடனேயே தேர்தலை விரைவுபடுத்த ஒன்றிணைந்த எதிரணி கோரி வருகிறது.
ஆனால், அது சாத்தியப்படாது எதிர்வரும் பத்து ஆண்டுகளுக்கு ஐக்கிய தேசிய கட்சியின் ஆட்சியே நாட்டில் மேலோங்கும்” எனத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.