இரண்டாவது நாளாகவும் அரச ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்
In இந்தியா January 23, 2019 7:23 am GMT 0 Comments 1250 by : Yuganthini
தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் உள்ளிட்ட அரச ஊழியர்கள் இரண்டாவது நாளாகவும் வேலை நிறுத்த போராட்டத்தில் இன்று (புதன்கிழமை) ஈடுபட்டுள்ளனர்.
சம்பளம் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி குறித்த வேலை நிறுத்த போராட்டத்தை இவர்கள் மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட்டு ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டுமென தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
ஜாக்டோ- ஜியோ எனும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பின் சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள 150 சங்கங்களைச் சேர்ந்த அரச ஊழியர்கள், மற்றும் ஆசிரியர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்துமாறும், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரச ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்தே இப்போராட்டம் மேற்கொள்ளப்படுகின்றது.
மேலும், 21 மாத சம்பள நிலுவை தொகையினை வழங்க வேண்டும், சத்துணவு- அங்கன்வாடி பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.
இதுவரையில் தமிழக அரசிடம் இருந்து சாதகமான பதில் கிடைக்காதமையால் அங்கு தொடர் போராட்டங்கள் இடம்பெறுகின்றன.
இதனால் அரச துறையின் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், ஆசிரியர்கள் பணிக்கு வராததால் ஒரு சில மாவட்டங்களில் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் பரீட்சை காலம் ஆரம்பிக்கவுள்ளதால் மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் அரசு அனைத்து மாற்று ஏற்பாடுகளையும் செய்துள்ளது.
இதேவேளை, பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஊதியத்தை நிறுத்துமாறு தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட்டு ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டுமென தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கோரியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.