இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகளின் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதி

இந்தியாவில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா மற்றும் பாரத் பயோடெக் ஆகிய நிறுவனங்கள் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசிகளின் அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த கோவிஷீல்டு தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதிக்கலாம் என இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர் குழு பரிந்துரை செய்திருந்தது.
இதனையடுத்து கோவிஷீல்டு தடுப்பூசிக்கு மத்திய அரசு அங்கீகாரம் அளித்தது. இதேபோல், பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம் எனவும் நிபுணர் குழு பரிந்துரை வழங்கியது.
இதனையடுத்து, இந்த இரண்டு மருந்துகளின் தரம் மற்றும் பரிசோதனை விபரங்கள் தொடர்பாக மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு ஆய்வு செய்தது.
இந்த நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி, “கோவிஷீல்டு, கோவாக்சின் கொரோனா தடுப்பூசி மருந்துகளின் பரிசோதனை முடிவுகளை ஆய்வு செய்தோம்.
இந்த ஆய்வின் முடிவில் கோவிஷீல்டு, கோவாக்சின் கொரோனா தடுப்பூசிகளுக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கியுள்ளது. அவசரகால பயன்பாட்டிற்கு இந்த மருந்துகளை பயன்படுத்திக்கொள்ளலாம்” என அவர் மேலும் கூறினார்.
மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்ததையடுத்து, இந்த மருந்துகளை மக்களுக்கு செலுத்தும் பணி விரைவில் தொடங்கவுள்ளது.
மேலும் முதற்கட்டமாக முன்னுரிமை பட்டியலில் உள்ளவர்களுக்கு செலுத்தப்படுகிறது என்றும் இதற்கான பயனாளிகள் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.