இரண்டு மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்கின்றது அரசாங்கம்…!
In இலங்கை January 29, 2021 6:14 am GMT 0 Comments 1403 by : Jeyachandran Vithushan

பைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனத்திடம் இருந்து இரண்டு மில்லியன் டோஸ் கொரோனா தடுப்பூசியை பெற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கம் முன்பதிவு செய்துள்ளது.
அரச மருந்துக் கழகத்தினால் இதற்கான இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஆரம்ப சுகாதார, தொற்றுநோய்கள் மற்றும் கோவிட் நோய் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சின் செயலாளர் அமல் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
எத்தனை தடுப்பூசிகளைப் பெறுவோம் என்பதை குறிப்பிட்டு கூற முடியாது என தெரிவித்த அவர், கோவக்ஸ் திட்டத்தின் மூலம் பெற்றுக் கொள்ளும் தடுப்பூசிகளில் பைசர் சேர்க்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பைசர் தடுப்பூசியை -70 பாகை செல்ஷியஸ் வெப்பநிலையில் களஞ்சியப்படுத்த வேண்டிய நிலையில் அதற்காக 35 முதல் 40 அரச மற்றும் தனியார் களஞ்சியபடுத்தல் நிலையங்கள் உள்ளன என்றும் அமைச்சின் செயலாளர் அமல் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் பைசரும் ஜேர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள குறித்த தடுப்பூசியின் ஒரு டோஸின் விலை கடந்த நவம்பரில் 20 டொலர் என அறிவிக்கப்பட்டது.
இதேவேளை பிரித்தானியா மற்றும் தென்னாப்பிரிக்காவில் சமீபத்தில் கண்டறியப்பட்ட புதிய கொரோனா தொற்று பிறழ்வுகளுக்கு எதிராக இந்த தடுப்பூசி பயனுள்ளதாக இருக்கும் என இரு நிறுவனங்களும் நேற்று அறிவித்தன.
அந்தவகையில் இந்த வார தொடக்கத்தில், ஐரோப்பிய நாடுகளான டென்மார்க், ஐஸ்லாந்து, சுவிஸர்லாந்து, ஜேர்மனி மற்றும் இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்றின் புதிய மாறுபாடு இலங்கையிலும் கண்டறியப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.