இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோவுக்கு கொரோனா!
In இலங்கை January 27, 2021 6:03 am GMT 0 Comments 1476 by : Yuganthini

இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நாடாளுமன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளது.
அண்மையில் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹகீம் ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் 31 பேரும் பணியாளர்கள் பலரும் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றில் சகலருக்கும் பி.சி.ஆர்.பரிசோதனைகளை முன்னெடுக்க வேண்டுமென சபாநாயகர் வலியுறுத்தியிருந்தார்.
அதற்கமைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பணியாட்களுக்கு பி.சி.ஆர்.பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.
அதில் இலங்கை நாடாளுமன்றில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடும் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் உள்ளிட்ட ஐவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அதேபோன்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, அமைச்சர் பியல் நிஷாந்த, நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார ஆகியோருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.
அதற்கமைய நாடாளுமன்ற உறுப்பினர் 6 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது அமைச்சர் அருந்திக்க பெர்ணான்டோவுக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளான இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர, அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மற்றும் முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் பூரண குணமடைந்து சிகிச்சை நிலையத்தில் இருந்து வௌியேறியுள்ளனர்.
ஆனால் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, அமைச்சர் பியல் நிஷாந்த, நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார ஆகியோர் கேகாலை வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.