இராணுவத்தினரின் சோதனை நடவடிக்கையை காணொளி எடுத்தவருக்கு சிக்கல்!
In இலங்கை May 6, 2019 5:23 am GMT 0 Comments 2323 by : Yuganthini

இராணுவத்தினரின் சோதனை நடவடிக்கையை தனது கைபேசியில் ஒளிப்படம் மற்றும் காணொளி பதிவுகளை மேற்கொண்டவரை கடுமையாக எச்சரித்து பொலிஸார் விடுவித்துள்ளனர்.
சுண்டிக்குளம் கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க தலைவரும், வடமராட்சி கிழக்கு பிரஜைகள் குழு செயலாளருமான செல்வராசா உதயசிவத்துக்கே கடுமையான எச்சரித்து பொலிஸார் விடுவித்துள்ளனர்.
வடமராட்சி கிழக்கு- சுண்டிக்குளம், பூனைதொடுவாய் கடற்கரையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இனந்தெரியாத சந்தேகநபர்கள் சிலர் படகில் வந்து கரை இறங்கி செல்வதனை கண்ணுற்ற அப்பகுதி மீனவர்கள் அது தொடர்பில் பிரதேச செயலாளருக்கு அறிவித்தனர்.
பின்னர் பிரதேச செயலாளர், இராணுவம் கடற்படை மற்றும் பொலிஸாருக்கு அறிவித்தார். குறித்த தகவலுக்கமைய அப்பகுதிக்கு விரைந்த படையினர் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதன்போது அப்பகுதி மக்களும் தேடுதல் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கினர்.
அப்போது கடற்கரையிலிருந்து சற்று தொலைவில் இருந்த காட்டு பகுதிக்குள் நான்கு பொதிகளில் பொதியிடப்பட்ட நிலையில் ஒரு தொகை கேரளா கஞ்சா மீட்கப்பட்டது.
இதன்போது அங்கிருந்த செல்வராசா உதயசிவம், தனது கைபேசியில் ஒளிப்படம் மற்றும் காணொளிகளை பதிவு செய்தார். அதனை அவதானித்த இராணுவத்தினர் அவரது கைபேசியை பறித்ததுடன், அவரையும் கைது செய்தனர்.
பின்னர் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது ஊடகவியலாளர்களுக்கு வழங்கவே ஒளிப்படம் காணொளிகளை பதிவு செய்ததாக கூறியுள்ளார்.
ஆனாலும் அதனை ஏற்க மறுத்த இராணுவத்தினர், அவரை கைது செய்து கட்டைக்காடு இராணுவ முகாமுக்கு கொண்டு சென்றனர். அங்கு சுமார் 6 மணி நேரம் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் மாலை 4 மணியளவில் அவரை பளை பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.
பளை பொலிசார் இரவு 7 மணி வரையில் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த பின்னர், அவரை கடுமையாக எச்சரித்து விடுவித்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.