இறந்தவர்களை தேடுவதை விட உயிருடன் வாழ்பவர்களுக்கு தீர்வை பெற்றுக்கொடுங்கள்- இனிய பாரதி
In Uncategorized January 26, 2021 8:23 am GMT 0 Comments 1448 by : Yuganthini
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் போக்கினால் முன்னாள் போராளிகள் தற்போதும் சிறைச்சாலையில் வாடுவதாக கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் இனிய பாரதி என்றழைக்கப்படும் குமாரசாமி புஸ்பகுமார் தெரிவித்துள்ளார்.
எனவே, ஐக்கிய நாடுகள் சபையில் இறந்தவர்களை தேடிச்செல்வதை விட உயிருடன் வாழ்பவர்களின் எதிர்காலத்திற்காக தீர்வினை பெற்றுக்கொடுக்க அனைவரும் முன்வர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அம்பாறை ஊடக அமையத்தில் நேற்று (திங்கட்கிழமை) இரவு இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே குமாரசாமி புஸ்பகுமார் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இறந்தவர்களை பற்றி பேசுவதைவிட இருப்பவர்களை பற்றி பேச வேண்டும்.
குற்றங்கள் நடந்து முடிந்தவை உண்மைதான். அதனை வைத்துதான் அரசியல் நடத்துகின்றார்கள் என்பதும் மக்களுக்கும் தெரிந்த விடயம் ஆகும்.
ஆனால், ஐக்கிய நாடுகள் சபையில் சிறைச்சாலையிலுள்ள முன்னாள் போராளிகளை பற்றிதான் பேச வேண்டும் என நினைக்கின்றேன்.
நானும் திட்டமிடப்பட்ட பழிவாங்கல் காரணமாக சிறைக்கு சென்றிருந்தேன்.இது மாத்திரமன்றி பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகளை தொடுத்திருந்தார்கள்.
இதனால் பல்வேறு சிறைகளுக்கு சென்று வந்திருந்தேன். இதன்போது முன்னாள் போராளிகளை சந்தித்துள்ளேன். பலர் சிறைத்தண்டனை அனுபவித்தாலும் சிலருக்கு எதுவித வழக்கும் தொடுக்காமல் வீணாக சிறையில் வாடுகின்றனர்.
அவர்கள் மிகவும் மோசமான கஸ்டங்களை அனுபவித்து கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கான தீர்வு என்ன? இறந்தவர்களை பற்றி பேசுகின்றபோது உயிருடன் உள்ளவர்களை பற்றி யார் பேசுவது? எந்த சபையில் பேசுவது என்பது எனது கேள்வியாகும்.
கடந்த காலங்களில் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன இருந்தபோது, பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ இருந்தார். அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு ஒரு கோரிக்கையினை முன்வைத்திருந்தார்.
அதாவது முன்னாள் போராளிகள் அனைவரையும் விடுதலை செய்கின்றேன் எனவும் தன்னுடன் இணைந்து பயணிக்குமாறு கேட்டிருந்தார். அன்று அவ்வாறு இணைந்து சென்றிருந்தால் தற்போது சிரமங்களை சிறைச்சாலையில் எதிர்நோக்கும் முன்னாள் போராளிகள் விடுதலை செய்யப்பட்டிருப்பர்.
எனவே இந்த ஐ.நா.சபையில் இறந்தவர்களை தேடிச்செல்வதை விட உயிருடன் வாழ்பவர்களின் எதிர்காலத்திற்காக தீர்வினை பெற்றுக்கொடுக்க அனைவரும் முன்வர வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.