ராஜஸ்தான் அதிரடி வெற்றி!: இறுதி வாய்ப்பை நழுவவிட்டது பெங்களூர்!

நடைபெற்றுவரும் ஐ.பி.எல் போட்டிகளின் முக்கியத்துவம் வாய்ந்த போட்டியில் ராஜஸ்தான் அணி 30 ஒட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று பிளே ஓப் சுற்றுக்கு நுழைவதற்கான சந்தர்ப்பத்தை தக்கவைத்துள்ளது. அதேவேளை பிளே ஓப் சுற்றுக்கான இறுதிவாய்ப்பை பெங்களூர் அணி இழந்தது.
ஜெயப்பூர், ஷவாய் மன்சிங் மைதானத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது.
நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 164 ஓட்டங்களைப் பெற்றது.
ராஜஸ்தான் அணி சார்பில், ராகுல் த்ரிபதி 3 ஆறு ஓட்டங்கள், 5 நான்கு ஓட்டங்கள் உள்ளடங்கலாக 80 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்ததுடன் ரஹானே 33 ஓட்டங்களையும் மற்றும் க்ளாஷன் 32 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்து வீச்சில் யாதவ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு மொஹமட் சிராஜ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினார்.
பதிலுக்கு 165 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய பெங்களூர் அணி ஆரம்பத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டிய போதும், 10 ஓவர்களைக் கடந்த நிலையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இந்நிலையில் 19.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 134 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 30 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
பெங்களூர் அணி சார்பில், ஏ.பி.டி வில்லியர்ஸ் 53 ஓட்டங்களையும், பட்டேல் 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்து வீச்சில் கோபல் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதோடு, லாப்லிங், உனத்கட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஐஸ் சோதி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
போட்டியின் ஆட்டநாயகனாக 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய கோபல் தெரிவுசெய்யப்பட்டார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.