இறைவனின் பெயரால் மனிதர்களை கொல்ல முடியுமா? – பேராயர் ரஞ்சித் ஆண்டகை கேள்வி
In ஆசிரியர் தெரிவு April 28, 2019 5:06 am GMT 0 Comments 3012 by : Varshini

அன்பின், கருணையின் வெளிப்பாடாக கடவுள் காணப்படுகின்றார். அவ்வாறு இருக்கும்போது கடவுளின் பெயரால் எவ்வாறு மனிதர்களை கொல்ல முடியுமென பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கேள்வியெழுப்பியுள்ளார்.
இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் குண்டுத்தாக்குதல்ளைத் தொடர்ந்து மக்கள் வீடுகளில் முடங்கிப்போயுள்ளனர். இந்நிலையில், அவர்கள் வீடுகளில் பிரார்த்தனைகளை முன்னெடுக்கும் வகையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொலைக்காட்சி வழியாக விசேட ஆராதனையை முன்னெடுத்தார். இதன்போது ஆற்றிய உரையில் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
கொடூரச் சம்பவத்திற்கு இறைவனை காரணம் காட்டுவது முரணாக அமைந்துள்ளதென்றும் அவர் குறிப்பிட்டார்.
ஈஸ்டர் ஞாயிறு தினமான கடந்த 21ஆம் திகதி நாட்டின் பல பகுதிகளிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் கொழும்பிலுள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 253 பேரின் உயிர்கள் காவுகொள்ளப்பட்டதோடு, சுமார் 500 பேர் காயமடைந்துள்ளனர்.
அதன் பின்னரும் பல பகுதிகளிலும் வெடிப்புச் சம்பவங்களும் தாக்குதல்களும் இடம்பெறுகின்றமை, மக்களை வெளியில் செல்ல முடியாத நிலைக்கு தள்ளியுள்ளது. இந்நிலையில், அவர்கள் வீடுகளில் தமது பிரார்த்தனைகளை முன்னெடுக்கும் வகையில் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையினால் ஞாயிறு ஆராதனை நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.