இலங்கையிலும் கொரோனா தடுப்பூசிகள்- முதற்கட்டமாக 6 வைத்தியசாலைகளுக்கு விநியோகம்
In இலங்கை January 28, 2021 3:38 am GMT 0 Comments 1579 by : Yuganthini

இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ள ஒக்ஸ்போர்ட்- அஸ்ட்ராஜெனெகா கொவிட்- 19 தடுப்பூசிகள் இன்று (வியாழக்கிழமை) நாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளது.
இன்று முற்பகல் 11 மணியளவில், அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளை கொண்டுவரும் விமானம் நாட்டை வந்தடையவுள்ளதாக விமான நிலையம் மற்றும் விமான சேவைகளின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு இந்திய அரசு, அஸ்ட்ராஜெனெகா கொவிட்- 19 தடுப்பூசிகளை நன்கொடையாக இலங்கைக்கு வழங்கியுள்ளது.
இவ்வாறு இன்று நாட்டிற்கு கொண்டுவரப்படும் தடுப்பூசிகளை விமான நிலைய குளிர்சேமிப்பகத்தில் களஞ்சியப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை குறித்த தடுப்பூசிகளை கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள 6 வைத்தியசாலைகளுக்கு முதற்கட்டமாக வழங்கவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய குறித்த வைத்தியசாலைகளிலுள்ள பணியாளர்கள் மீது இந்த தடுப்பூசிகளை செலுத்தவுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
அதாவது கொழும்பு தேசிய வைத்தியசாலை, கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை, கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலை, ஹோமகாமா பிரதான வைத்தியசாலை, கொழும்பு கிழக்கு பிரதான வைத்தியசாலை மற்றும் அங்கொடயிலுள்ள தொற்று நோய் வைத்தியசாலை (I.D.H) ஆகியவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊழியர்களுக்கே இந்த தடுப்பூசிகளை செலுத்தவுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
குறித்த வைத்தியசாலைகளில் முதற்கட்டமாக சுமார் 25 சதவீத ஊழியர்களுக்கு ஆரம்பத்தில் தடுப்பூசி செலுத்தப்படும். ஏனைய ஊழியர்களுக்கு அடுத்த சில நாட்களில் தடுப்பூசி செலுத்தப்படும் என அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை பிரதான வைத்தியசாலைகளில் தடுப்பூசி செலுத்தும் பணிகளுக்கு இணையாக, மத்திய ஒளடத களஞ்சியத்தின், நாடு முழுவதும் உள்ள 26 பிரதேச களஞ்சியங்களுக்கும் தடுப்பூசிகளை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை நாளை முதல் ஆரம்பிக்கப்படும் எனவும் வைத்தியர் ஹேமந்த ஹேரத் குறிப்பிட்டார்.
தடுப்பூசிகள் பகிர்ந்தளிக்கப்பட்டதை தொடர்ந்து, உடனடியாக அடுத்த வாரம் முதல், ஏனைய வைத்தியசாலைகளில் உள்ள பணிக்குழாமினருக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
இதேவேளை இலங்கைக்கு சீன அரசாங்கம் மூன்று இலட்சம் Sinopharm கொரோனா தடுப்பூசியினை வழங்கவுள்ளதாக கொழும்பில் உள்ள சீன தூதரகம் அறிவித்துள்ளது.
குறித்த தடுப்பூசிகளும் எதிர்வரும் பெப்ரவரி மாத நடுப்பகுதியில் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்படும் எனவும் சீன தூதரகம் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.