இலங்கைக்கு பயணிப்பதை தவிர்க்குமாறு சுவிஸ் பிரஜைகளுக்கு அறிவுறுத்தல்!

இலங்கைக்கு பயணிப்பதை தவிர்க்குமாறு சுவிஸ் பிரஜைகளுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
சுவிஸ் வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் ஒன்றுகூடி வழிபாட்டில் ஈடுபட்டிருந்த மக்கள் மீது தற்கொலை குண்டுதாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 250 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தனர்.
இந்த தாக்குதல்கள் கிறிஸ்தவ தேவாலயங்களில் மட்டுமல்லாது நட்சத்திர விடுதிகளிலும் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது இலங்கை மக்கள் மட்டுமல்லாது வெளிநாட்டவர்களும் உயிரிழந்திருந்தனர்.
இதனையடுத்து தொடர்ந்தும் இலங்கை மீது தாக்குதல்கள் நடத்தப்படலாமென எச்சரிக்கைவிடுக்கப்பட்டதுடன், அவ்வாறான சம்பவங்களே தினமும் அரங்கேறியவண்ணமுள்ளன.
இந்தநிலையிலேயே சுவிஸ் பிரஜைகளுக்கு இவ்வாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் குழப்பம் வாய்ந்ததாக உள்ளது எனவும், இதன் பரிணாமம் நிச்சயமற்றதாக உள்ளது எனவும் சுவிஸ் வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள அசாதாரண சூழல் கட்டுக்குள் கொண்டுவரப்படும் வரையில் சுவிஸ் குடிமக்கள் இலங்கை பயணங்களை இரத்து செய்யுமாறும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.