இலங்கையின் தென்பகுதி குறித்தும் இந்தியா கவனம் செலுத்த வேண்டும்- மஹிந்த
In இலங்கை November 28, 2020 3:14 am GMT 0 Comments 1301 by : Yuganthini

வடக்கு மற்றும் மலையகம் குறித்து இந்தியா கவனம் செலுத்துவதைப் போன்று இலங்கையின் தென்பகுதி குறித்தும் கவனம் செலுத்தவேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீஅஜித் தோவாலுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (வெள்ளிக்கிழமை) விஜேராம உத்தியோகப்பூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.
இதன்போதே இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீஅஜித் தோவாலிடம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, இலங்கை, இந்தியா உள்ளிட்ட இந்த பிராந்திய நாடுகளுக்கு வெளிநாட்டில் தொழில்புரிபவர்கள் ஊடாக சிறந்த பொருளாதார பலம் கிடைத்ததுடன், தற்போதைய கொவிட்-19 தொற்று நிலைமைக்கு மத்தியில் அவர்கள் வேலைவாய்ப்பை இழந்தமையினால், அவர்கள் தங்களது சொந்த நாடுகளுக்கு திரும்பியுள்ளமையால் அனைத்து நாடுகளுக்கும் கிடைத்த அந்நிய செலாவணி குறைவடைந்துள்ளதாகவும் அஜித் தோவால் சுட்டிக்காட்டினார்.
எனினும், கொவிட்-19 தொற்று நிலைமைக்கு மத்தியில் பொருளாதாரத்தை பலப்படுத்த வேண்டும் என்று கூறியதுடன், இப்பிராந்தியத்தின் பிற நாடுகளுடன் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் மற்றும் அபிவிருத்தியை நோக்கி பயணிக்கும் மூலோபாயங்களை கண்டறிய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
அதற்கு, பிராந்தியத்தின் பிற நாடுகளுக்கு இடையே கருத்தாடலொன்றை கட்டியெழுப்புவதுடன், பொருளாதார மந்தநிலைக்கு தீர்வை கண்டறிந்து பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான மூலோபாயங்களை கண்டறிவதற்கும், மூலோபாய பொறிமுறையொன்றை உருவாக்குவதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை முன்னிலை வகிக்குமாறும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஸ்ரீ அஜித் தோவால் முன்மொழிந்தார்.
அதற்கு இந்திய அரசாங்கத்தின் முழுமையான ஆதரவை பெற்றுத் தருவதாக தெரிவித்த அஜித் தோவால், கொவிட-19 நிலைமைக்கு மத்தியிலும் இலங்கை, இந்தியா உள்ளிட்ட பிராந்தியத்தின் பிற நாடுகளின் அபிவிருத்தியை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியின் கீழ் வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பிரதேசங்களில் வீடமைப்பு திட்டங்களை செயற்படுத்தியுள்ளதாக தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அத்தகைய வீடமைப்பு திட்டங்களை தென் பகுதிகளை மையமாகக் கொண்டு ஆரம்பிப்பதற்கும் ஆதரவை பெற்றுத் தருமாறு கேட்டுக் கொண்டார்.
அதற்கு இந்திய அரசாங்கத்தின் ஒத்துழைப்பை பெற்றுத் தருவதாக ஸ்ரீஅஜித் தோவால் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.