இலங்கையின் பூர்வீகக் குடிகளான தமிழ் இந்துக்கள் திட்டமிட்டு அவமதிப்பு – தமிழ் கட்சிகள் கூட்டாகக் கண்டனம்!

கார்த்திகைத் திருநாளன்று, வடக்கு கிழக்கில் தமிழ் இந்துமக்கள் தீபங்களை ஏற்றுவதற்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டமையைக் கண்டித்து, தமிழ் தேசியக் கட்சிகள் அரசாங்கத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளன.
இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம், தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ் தேசியக் கட்சி, தமிழர் சுயாட்சிக் கழகம், தமிழ் தேசிய பசுமை இயக்கம் ஆகிய கட்சிகளின் சார்பில் மாவை சேனாதிராஜா கையெழுத்திட்டு இந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் இந்த மண்ணின் பூர்வீகக் குடிகள் எனவும் அவர்களுக்கு மிகவும் தொன்மையான மொழி, மத, கலாசார பண்பாடுகள் உண்டு எனவும் குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பாரம்பரியமாகவே மத அனுஸ்டானங்களையும், கலாசார பண்பாடுகளையும் மிக இறுக்கமாகப் பின்பற்றி வரும் ஒரு இனமாகவே தமிழ் தேசிய இனம் இலங்கை மண்ணில் வாழ்ந்து வருகின்றது.
அவர்களது கலாசாரப் பண்பாடுகளைப் பற்றிப் பிடிப்பதற்காகவும் அவற்றை யாரும் அழித்துவிடக்கூடாது என்பதற்காகவும் தமிழ் தேசிய இனம் தொடர்ந்தும் போராடி வருகின்றது.
அவற்றைத் தட்டிப்பறிக்க முனைபவர்களுக்கு எதிராக விட்டுக்கொடுப்பு இன்றித் தொடர்ந்தும் போராடி வருகின்றார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 29ஆம் திகதி நடைபெற்ற தமிழ் இந்து மக்களின் பாரம்பரிய மத அனுஸ்டானமான கார்த்திகை விளக்கீட்டிற்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டமையைக் கண்டிப்பதாக குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.