இலங்கையின் முதல் செய்மதி விண்வெளிக்கு அனுப்பிவைப்பு!
In ஆசிரியர் தெரிவு April 18, 2019 2:12 am GMT 0 Comments 2780 by : Dhackshala
இலங்கை வரலாற்றில் முதன் முறையாக இலங்கையின் பொறியியலாளர்களினால் நிர்மாணிக்கப்பட்ட இராவணா-1 செய்மதி சர்வதேச விண்வெளி மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
குறித்த செய்மதி இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 2.16 மணிக்கு அமெரிக்காவிலிருந்து சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் – வெர்ஜினியா பிராந்தியத்திலிருந்து நாசா விண்வெளி நிறுவனத்தின் ஏவூர்திப் பொறியின் மூலம், புவியிலிருந்து சுமார் 400 கிலோமீற்றர் தொலைவில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்திற்கே இந்த செய்மதி கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
ஜப்பானின் கியூ பல்கலைக்ககத்தின் பர்டிஸ் என்ற விசேட திட்டத்தின்கீழ் தயாரிக்கப்பட்டுள்ள ஆயிரம் கனசென்றிமீற்றர் நீளமுடைய இராவணா – 1 செய்மதியானது, 1.1 கிலோ கிராம் நிறைகொண்டதாகும்.
ஆர்த்தர் சீ.க்ளாக் மையத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் சனத் பனாவென்னவின் யோசனைக்கு அமைய, இந்த செய்மதி திட்டம் ஆரம்பிக்கப்பட்டதுடன், அதற்கு இராவணா- 1 என்றும் பெயரிடப்பட்டுள்ளது.
இராவணனின் விண்வெளி தொழில்நுட்பத்தை உலகிற்கு எடுத்துக்கூறும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தச் செய்மதியானது, சர்வதேச விண்வெளி மையத்திற்கு கொண்டுசெல்லப்பட்டதன் பின்னர், எதிர்வரும் மே அல்லது ஜுன் மாதமளவில் அது விண்ணில் நிலைநிறுத்தப்படவுள்ளது.
குறித்த செய்மதி விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதன் பின்னர், இலங்கையையும் அதனைச் சூழவுள்ள வலையத்தையும் நிழற்படம் எடுத்தல் உள்ளிட்ட 5 செயற்பாடுகளை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.