இலங்கையிலும் பா.ஜ.க.அரசாங்கத்தை அமைக்க திட்டமுள்ளது- அமித்ஷா தெரிவித்ததாக வெளியான கருத்தினால் சர்ச்சை
In ஆசிரியர் தெரிவு February 15, 2021 3:31 am GMT 0 Comments 1440 by : Yuganthini

இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு நேபாளத்திலும் இலங்கையிலும் பா.ஜ.க.அரசாங்கத்தினை அமைக்கும் திட்டமுள்ளது என திரிபுரா முதலமைச்சர் பிப்லாப் டெப் தெரிவித்துள்ள கருத்தினால் தற்போது சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு பிப்லாப் டெப் தெரிவித்ததாக ஈஸ்ட் மொஜொ தெரிவித்துள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, கடந்த சனிக்கிழமை திரிபுராவிற்கு விஜயம் மேற்கொண்ட இந்திய உள்துறை அமைச்சர், இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வெற்றிபெற்ற பின்னர் பா.ஜ.க.விற்கு இலங்கையிலும் நேபாளத்திலும் அரசாங்கத்தை அமைக்கும் எண்ணமுள்ளது என குறிப்பிட்டார் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் இலங்கையிலும் நேபாளத்திலும் எங்களது கட்சியை விஸ்தரிக்கவேண்டும். அங்கு ஆட்சியை அமைப்பதற்காக வெற்றிபெறவேண்டும் எனவும் அமித்ஷா கூறியதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை திரிபுரா முதலமைச்சர் தெரிவித்துள்ள கருத்து குறித்து மத்திய அரசாங்கம் விளக்கம் அளிக்கவேண்டும் என திரிபுராவின் எதிர்கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
முதலமைச்சருக்கு ஜனநாயகம் மற்றும் அரசமைப்பு குறித்து எதுவும் தெரியாது என குறிப்பிட்டுள்ள எதிர்கட்சி, அமித்ஷாவின் கருத்துக்கள் வெளிநாடு ஒன்றின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்கு சமம் எனவும் குறிப்பிட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.