இலங்கையில் ஒரேநாளில் அதிக மரணங்கள் பதிவாக காரணம் – தொற்று நோயியல் பிரிவு விளக்கம்
In இலங்கை November 23, 2020 3:34 am GMT 0 Comments 1527 by : Dhackshala

உயிரிழப்புகளின் பின்னர் பி.சி.ஆர். முடிவுகளைப் பெற்றுக்கொள்ள சற்று தாமதமாவதனால் உயிரிழப்புகள் தொடர்பாக அறிவிப்பதற்கும் கால தாமதமாகிறது என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டில் கடந்த சில நாட்களாக அதிகளவான கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. குறிப்பாக கடந்த சனிக்கிழமை கொரோனா வைரஸினால் 9 மரணங்கள் பதிவாகியதாக அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், பி.சி.ஆர். முடிவுகளைப் பெற்றுக்கொள்ள சற்று தாமதமாவதனால் மரணங்கள் பதிவாகிய அன்றைய தினமே அவை தொடர்பில் அறிவிக்க முடியாததால், அனைத்தையும் சேர்த்து வெளியிடும் போது மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதைப் போன்று தென்படும் என சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவின் பிரதானி விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார்.
சனிக்கிழமை அறிவிக்கப்பட்ட 9 மரணங்களில் 4 மரணங்கள் அன்றைய தினம் ஏற்பட்டவை என்றும் ஏனைய 5 மரணங்களில் நான்கு 20ஆம் திகதியும் மற்றொன்று 19ஆம் திகதி ஏற்பட்ட மரணமாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறிருப்பினும் நாட்டு மக்கள் அனைவரும் தொடர்ந்தும் சுகாதார விதிமுறைகளை கடுமையாக பின்பற்ற வேண்டும் என வலியுறுத்திய அவர், வீடுகளில் முதியோர் அல்லது நாட்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பார்களாயின் அவ்வாறானவர்கள் சமூகத்திற்கு வருவதை இயன்றளவில் குறைத்துக்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அறிவித்தல் போக்குவரத்து கட்டுப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளுக்கு மாத்திரமல்ல என்பதுடன், முழு நாட்டுக்கும் பொறுத்தமானதாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக அபாயம் மிக்க பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள மேல் மாகாணத்திலுள்ள மக்கள் இதனை கடுமையாக பின்பற்ற வேண்டியது அவசியமாகும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.