இலங்கையில் கொரோனா தொற்றினால் மேலும் மூவர் உயிரிழப்பு
In ஆசிரியர் தெரிவு December 29, 2020 2:23 am GMT 0 Comments 1448 by : Dhackshala
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 194 ஆக அதிகரித்துள்ளது.
அதன்படி, தர்கா நகர் பிரதேசத்தைச் சேர்ந்த, 90 வயதான ஆணொருவர், களுத்துறை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், டிசம்பர் 24ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
மரணத்திற்கான காரணம், கொரோனா தொற்றுடன் ஏற்பட்ட இரத்தம் நஞ்சானமை மற்றும் அதிக இரத்த அழுத்தத்தினால் ஏற்பட்ட மாரடைப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெல்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 83 வயதான ஆணொருவர் கண்டி பொது வைத்தியசாலையில் இருந்து தெல்தெனிய ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதுடன், அந்த வைத்தியசாலையில் டிசம்பர் 28ஆம் திகதி மரணமானார்.
மரணத்திற்கான காரணம், கொரோனா நியூமோனியா மற்றும் உக்கிர சிறுநீரக நோய் நிலை என அறிவிக்கப்பட்டுள்ளது.
களுத்துறை தெற்கு பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதான பெண்ணொருவர் களுத்துறை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் டிசம்பர் 22ஆம் திகதி மரணமடைந்துள்ளார்.
மரணத்திற்கான காரணம், கொரோனா வைரஸ் தொற்றுடன் இரத்தம் நஞ்சானமை என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.