இலங்கையில் சிறுவணிக முயற்சிகளுக்கான உதவித் திட்டத்தை ஆரம்பித்தது அமெரிக்கா!

இலங்கையிலுள்ள சிறுவணிக முயற்சிகளுக்கு அவசியமான உதவிகளை வழங்குவதற்கு அமெரிக்கா உதவித் திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.
இந்தத் திட்டம், இலங்கை மதிப்பில் 3.6 பில்லியன் ரூபாய் பெறுமதியிலானது என இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவரகத்தினால் நிதியளிக்கப்படும் இந்த செயற்திட்டத்தின் ஊடாக சிறுவணிக முயற்சிகளுக்கு அவசிமயான நிதி மற்றும் தொழில்நுட்ப உதவிகள் வழங்கப்படவுள்ளன.
இதனூடாக, ஏற்கனவே கொரோனா வைரஸ் பரவலினால் நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கும் புதிய சிறுவணிக முயற்சிகள் உருவாக்கப்படுவதற்கும் தொழிற்படையில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்கப்படுவதற்கும் எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நிலைபேறான பொருளாதார வளர்ச்சியில் தனியார் துறையினரின் பங்களிப்பை வலுப்படுத்துதல் மற்றும் வணிகங்களின் இலாபத்தை அதிகரித்தல் ஆகியவற்றுக்குப் பங்களிப்புச் செய்வதற்கான கடப்பாடு, அமெரிக்காவின் இந்தச் செயற்திட்டத்தின் மூலம் நிறைவேற்றப்படும் என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலைனா டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.