இலங்கையை அமெரிக்காவின் ஒரு பகுதியாக மாற்ற பிரதமர் முயற்சி: மஹிந்த தரப்பு சாடல்
In ஆசிரியர் தெரிவு April 30, 2019 5:18 am GMT 0 Comments 3058 by : Risha
இலங்கையை அமெரிக்காவின் ஒரு பகுதியாக மாற்றுவதற்கு தேவையான உதவிகள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் வழங்கப்பட்டு வருவதாக மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார விமர்சித்துள்ளார்.
நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”இலங்கையில் இடம்பெற்ற தீவிரவாத செயற்பாடுகளுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பொறுப்புக்கூற வேண்டும்.
பிரதமர் உள்ளிட்ட அரசாங்கம் ஆட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டு இடைக்கால அரசாங்கம் ஒன்று கொண்டுவரப்பட்டு தீவிரவாதச் செயற்பாடுகளுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
இஸ்லாமிய தீவிரவாjத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தனக்கு தேவையான வகையில் பயன்படுத்திக்கொள்ளவே பார்க்கிறார். இதன் ஊடாக பயங்கரவாதச் சட்டத்தை பயன்படுத்தவும், சர்வதேசத்தின் இராணுவத்தை இலங்கைக்குள் களமிறக்கவே அவர் முயற்சிக்கிறார்.
இன்று அனைத்து இடங்களிலும் அமெரிக்காவின் தலையீடு காணப்படுகிறது. அவர்களின் ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளப்படுகின்றன. அமெரிக்காவின் ஒரு பகுதியாக இலங்கையை மாற்றுவதற்கு தேவையான உதவிகள் அனைத்தும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
மேலும், ஜிகாதிகளை உருவாக்கியதிலும் பிரதமருக்கு பெரிய பங்கு உள்ளது. இன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆயுதங்கள் மீட்கப்படுகின்றன. சந்தேகத்திற்கிடமான பொருட்கள் மீட்கப்படுகின்றன.
அமெரிக்கா என்பது ஜிகாத் வாதத்துக்கு எதிரான கடுமையான போக்கையே கடைப்பிடிக்கிறது. அதேபோல், ஜிகாதிகளும் ஐக்கிய அமெரிக்காவை தங்களது எதிரிகளாகவே பார்க்கிறார்கள்.
இவை அனைத்தையும் தெரிந்துக்கொண்ட புலனாய்வுத் துறையினர், பல்வேறு விடயங்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதுதொடர்பிலான அனைத்துத் தகவல்களும் அரசாங்கத்திடம் இருந்துள்ளன. இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல்கள் தொடர்பிலான தகவல்களும் இந்திய புலனாய்வுத் துறையினரால் அரசாங்கத்திடம் வழங்கப்பட்டுள்ளன. எனினும், அரசாங்கம் இதுதொடர்பில் கவனம் செலுத்தவில்லை. இதற்கு பிரதமர் ரணில்விக்கிரமசிங்க தான் பொறுப்புக்கூற வேண்டும்.
சர்வதேச இராணுவத்தை இலங்கைக்குள் கொண்டுவரும் நோக்கிலேயே இவ்வாறான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த குற்றம் தொடர்பாக நடவடிக்கை எடுக்காது போனதுடன், சர்வதேசப் பயங்கரவாதத்தை தடுப்பதற்கு இலங்கையில் சட்டமில்லை என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். இவையெல்லாம் பாரதூரமான செயற்பாடுகளாகும். இவ்வாறான ஒரு பிரதமர் நாட்டில் இருப்பது மக்களுக்கான அச்சுறுத்தலாகவே இருக்கிறது. அவர் சரியாக இருந்தால் தனது பதவியை இராஜினாமா செய்திருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.