இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் சம்பந்தன் அதிருப்தி
ஜெனிவாவிற்கு அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவது தொடர்பில் தமக்கு திருப்தி கொள்ள முடியாதென, தமிழ் தேசியக் கூட்டமைப்பின தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
திருகோணமலையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அவர், அதன் பின்னர் ஊடகங்களிடம் இதனைத் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பாக மக்களும் அதிருப்தியுடனேயே இருக்கின்றனர் எனக் குறிப்பிட்ட சம்பந்தன், அதற்காக அதனை கைவிட முடியாதென்றும் போதிய முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்டு ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்திய சம்பந்தன், உரிய நேரத்தில் அது அமுல்படுத்தப்படாதவிடத்து அதற்கான விளைவுகள் நிச்சயம் இருக்குமென சுட்டிக்காட்டினார்.
ஜெனீவா தீர்மானத்தை நிறைவேற்ற ஒத்துழைப்பு வழங்கியதோடு, மக்களும் துன்பங்களுக்கும் துயரங்களுக்கும் மத்தியில் பொறுமையுடன் இருந்தார்கள். எனினும், அதனை நிறைவேற்றவில்லையென்பது தொடர்பில் சில நன்மை பயக்கக்கூடிய விளைவுகள் கிடைக்குமென குறிப்பிட்ட சம்பந்தன், அதற்கு பொறுமையுடன் இருக்க வேண்டுமென வலியுறுத்தினார்.
எதிர்வரும் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் அதனை நிறைவேற்றாவிட்டால், அதற்குரிய பின்விளைவுகள் ஏற்படுமென அவர் மேலும் குறிப்பிட்டார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.