இலங்கை கடற்பரப்புக்குள் வந்த இந்திய மீனவருக்கு கொரோனா- பலர் தனிமைப்படுத்தலில்
In இலங்கை January 25, 2021 3:47 am GMT 0 Comments 1395 by : Yuganthini

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக வட.மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 9 பேர், கடந்த 10 நாட்களாக ஊர்காவற்றுறை நீதிமன்றின் உத்தரவின் கீழ் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் அவர்களிடம் நேற்றைய தினம் (ஞாயிற்றுக்கிழமை) மாதிரிகள் பெறப்பட்டு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது அவர்களில் ஒருவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது.
இதனால் குறித்த மீனவரை, கொவிட் -19 சிகிச்சை நிலையத்துக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் ஏனையோர் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று முன்னெடுக்கப்பட்ட பி.சி.ஆர்.பரிசோதனைகளில் மேலும் இருவருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவர்களில் ஒருவர் அங்கொடயிலிருந்து வருகை தந்து, இரணைமடு வீதி சீரமைப்புப் பணிக்குழாமின் சாரதியாகக் கடமையாற்றுபவர். மற்றையவர் வவுனியா பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர். அவர் காய்ச்சல் காரணமாக வவுனியா பொது வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சைக்காக சென்றபோது மாதிரிகள் பெறப்பட்ட நிலையில், பி.சி.ஆர்.பரிசோதனையில் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.