இலங்கை குறித்து ஐ.நா.வில் கூட்டு நாடுகள் முன்வைக்கவுள்ள பிரேரணைக்கு அரசாங்கம் எதிர்ப்பு
In இலங்கை February 20, 2021 11:30 am GMT 0 Comments 1310 by : Dhackshala

மனித உரிமைகள் பேரவையின் 46வது மாநாட்டில் இலங்கை தொடர்பாக பிரித்தானியா தலைமையிலான கூட்டு நாடுகள் இணைந்து முன்வைக்கவுள்ள பிரேரணைக்கு அரசாங்கம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.
அந்த பிரேரணையை ஏற்றுக்கொள்ளபு்போவதில்லை என அமைச்சரவையின் இணைப்பேச்சாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு எதிராக ஏற்கனவே முன்வைக்கப்பட்டுள்ள பல பிரேரணைகள் அரசாங்கத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளன.
அதேபோன்று எதிர்வரும் காலங்களில் இலங்கைக்கு எதிரான பிரேரணைகளை நிராகரிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கை தொடர்பாக பிரித்தானியா தலைமையிலான கூட்டு நாடுகள் இணைந்து முன்வைக்கவுள்ள பிரேரணையொன்று நேற்று வெளியிடப்பட்டிருந்தது.
கனடா, ஜேர்மனி, வடமசெடொனியா, மலாவி, மொன்டினீக்ரோ, பிரித்தானியா ஆகிய நாடுகள் இணைந்து இந்த அறிக்கையினை வெளியிட்டிருந்தனர்.
இதில் போர் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை திரட்டுதல் ஆய்வு செய்தல் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் உள்ளிட்ட விடயங்களை வலியுறுத்தி எதிர்கால விசாரணைக்கான முதற்கட்ட நடவடிக்கையாக அவற்றை மேற்கொள்வதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் வெளியிட்டுள்ள முக்கியமான அறிக்கையை இந்த மாதம் ஜெனீவா அமர்வில் ஆராயவுள்ளதாக இலங்கை தொடர்பிலான கூட்டு நாடுகள் தெரிவித்துள்ளன.
மனித உரிமை பேரவைக்கு தயார் செய்வதற்காக இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள இலங்கை தொடர்பிலான கூட்டு நாடுகள், மனித உரிமை பேரவையில் இலங்கை குறித்து தீர்வு காணப்படவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.