இலங்கை குறித்த அறிக்கை மார்ச் 20இல் ஜெனீவாவில் சமர்ப்பிக்கப்படுகிறது!
In ஆசிரியர் தெரிவு January 13, 2019 7:10 am GMT 0 Comments 1376 by : ஜெயச்சந்திரன் விதுஷன்
ஐ.நா. மனித உரிமை பேரவையின் இலங்கை தொடர்பான அறிக்கை, எதிர்வரும் மார்ச் 20ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதம் நடைபெறவுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர், இந்த ஆண்டு பெப்ரவரி 25ஆம் திகதி ஆரம்பமாகி, மார்ச் 22 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
பேரவையின் நிகழ்ச்சி நிரல் வரைவு கடந்தவாரம் தயாரிக்கப்பட்ட போது, மார்ச் 20 ஆம் திகதி இலங்கை தொடர்பான விவாதத்தை நடத்துவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் இந்த அமர்வில், இலங்கை தொடர்பான அறிக்கையை, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்த அறிக்கையை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பாச்செலெட் அல்லது பிரதி ஆணையாளர் பேரவையில் சமர்ப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனை பகிரங்கமாக வெளியிடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதிகாரபூர்வமாக அந்த அறிக்கை மார்ச் 20ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டு, விவாதம் நடத்தப்படும் என்றும் பணியகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அளித்த வாக்குறுதியை மெதுவாகவே நிறைவேற்றும் நிலையில், வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் புதிய தீர்மானம் ஒன்றை கொண்டுவரும் முயற்சிகளும் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.