இலங்கை குறித்த புரிதல் மோடி அரசுக்கு இல்லை! – கோட்டாபய ராஜபக்ஷ

இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கத்திற்கு இலங்கை குறித்த புரிதல் இல்லையென்றும், இலங்கை மீது வித்தியாசமான பார்வையையே செலுத்தி வருகின்றதென்றும் இலங்கையின் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகமொன்றிற்கு வழங்கியுள்ள பிரத்தியேக செவ்வியிலேயே கோட்டா மேற்குறித்தவாறு தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் தலைமையிலான முன்னைய அரசாங்கம் தம்முடன் மிகுந்த புரிதலுடன் செயற்பட்டதாகவும், யுத்தத்தில் புலிகளை தோற்கடிப்பதற்கு முழுமையான ஆதரவை வழங்கியதாகவும் கோட்டா குறிப்பிட்டுள்ளார். ஆனால், நிலைமையை சரியாக புரிந்துகொள்ளாமல் தற்போதைய இந்திய அரசாங்கம் அவசர தீர்மானங்களை எடுப்பதாக கோட்டா குறிப்பிட்டுள்ளார்.
தமது ஆட்சிக்காலத்தில் இந்திய ராஜதந்திரிகள் உள்ளிட்ட அனைவரும் இலங்கைக்கு வருகின்ற சந்தர்ப்பங்களில் எதிரணியினரை சந்தித்துச் சென்றதாக சுட்டிக்காட்டிய கோட்டா, ஆனால் தற்போது எதிரணியினராக இருக்கும் தம்மை சந்திப்பதை தவிர்த்து வருகின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.
இறுதி யுத்தத்தின் போது அப்பாவி பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர். அதனால் உங்கள் கை இரத்தக்கறை படிந்ததென குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றனவே என ஊடகவியலாளர் கேள்வியெழுப்பியுள்ளார்.
இதற்கு பதிலளித்த கோட்டா, யுத்தத்தை நடத்துவதை விட அதனை முடிவுறுத்தியது மேலானதென்றும் தனது மனசாட்சிக்கு நேர்மையாகவே தான் செயற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். தான் யுத்தத்தை முடிவுறுத்தியதாலேயே இன்றைய ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்குச் சென்று அச்சமின்றி கலந்துரையாடுவதாகவும் கோட்டா கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.