இலங்கை சர்வதேச சக்திகளின் போர்க்களமானால் இலங்கையர்களுக்கே பேராபத்தாகும்!
May 5, 2019 2:43 am GMT

மீண்டும் அவசரகாலச் சட்டம், மீண்டும் இராணுவக் கெடுபிடிகள் என்று இலங்கையின் இயல்பு வாழ்வு சிதைக்கப்பட்டு கடந்த போர்க்காலத்தை பறைசாற்றி நிற்கின்றது. அடையாள அட்டையுடன் வெளியில் செல்வது பரிசோதனைகளுக்கு ஒத்துழைப்பது, வீடு திரும்பும்வரை நிச்சயமற்ற தன்மை என்பன மக்களை அச்சத்தில் தள்ளியுள்ளது.
இம்முறை நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சனையானது முழு இலங்கையர்களையும் இலக்கு வைத்துள்ளது. ஐ.எஸ். பயங்கரவாத இயக்கமே தற்போது இலங்கையின் அமைதியையும், இன ஐக்கியத்தையும் சீர்குழைத்துள்ளது.
ஒரு காலத்தில் ‘தமிழர்கள் எல்லோரும் புலிகள் என்றும், புலிகள் எல்லோரும் தமிழர்’ என்று கருதப்பட்ட வேளையில், ‘புலிகள் எல்லோரும் தமிழர் என்பது சரியாக இருக்கலாம், ஆனால் தமிழர்கள் எல்லோரும் புலிகள் அல்லர்’ என்ற மாற்றுக் கருத்துக்கள் தமிழர் பக்கமிருந்தே முன்வைக்கப்பட்டது.
அவ்வாறு மாற்று கருத்துடையவர்களை தமிழினத்தின் துரோகிகள் என்று பின்னாளில் புலிகள் கொலை செய்தார்கள் என்பதும், ஆகையால் தமிழ் மக்களிடையே யுத்தத்தை விரும்பாதவர்களும், படுகொலைகளை ஏற்றுக்கொள்ளாதவர்களும் தமது குரல்வளையை தாமே நெறித்துக்கொண்டு மௌனமாக இருந்துவிட்ட காலமும் இருந்தது.
உதாரணத்திற்கு இறுதி யுத்தத்தின்போது வன்னியில் இருந்த 3 இலட்சத்திற்கும் அதிகமான தமிழ் மக்களை புலிகளாகவே தமிழத் தரப்புகள் பிரசாரம் செய்தன. ஆனால் அவர்கள் விரும்பியோ, விரும்பாமலோ சூழ்நிலைக் கைதிகளாகவே வன்னியில் அகப்பட்டவர்கள் என்றும் சிலர் வாதிட்டனர்.
வன்னியிலிருந்த அனைவரையும் புலிகளாகவே கருதியிருந்தால், புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் அங்கு கொல்லப்பட்ட அனைவரும் புலிகள் என்றவாறாகவே கதை முடிவுக்கு வந்திருக்கவேண்டிய சூழல் அமைந்திருக்கும். இன்று இறுதி யுத்தத்தில் இன அழிப்பு நடந்தது என்றும், பாரிய மனிதப் பேரழிவு நடத்தப்பட்டது என்று யாரும் வாதிட முடியாத நிலை ஏற்பட்டிருக்கும்.
அங்கு அப்பாவி பொதுமக்கள் இருந்தார்கள். அவர்களில் சிலர் புலிகளாக இருந்தார்கள். ஆகவே இறந்தவர்களில் புலிகளின் கணக்குவேறு, பொது மக்களின் கணக்கு வேறு என்று வாதிட முடிவதாலேயே இன்று போர்க்குற்றம் நடந்ததாகவும், இன அழிப்பு நடந்ததாகவும் தமிழர் தரப்பு நியாயம் கேட்டு போராட முடிகின்றது.
ஏன் என்றால் இன்று புலிகள் கொல்லப்பட்டதற்காக எந்தவொரு தமிழர் தரப்பும் நீதிகேட்டுப் போராடவில்லை. அங்கே பொது மக்கள் கொல்லப்பட்டார்கள் என்றுதான் குரல்கொடுக்கின்றன.
அதுபோலவே இன்று மிலேச்சத்தனமான மனிதப் படுகொலைகளை செய்துள்ள ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு முஸ்லிம்களின் மதத்தை முன்னிறுத்தியதாகவும், அவர்களின் ஒரே இறைவனான அல்லாவுக்காக உயிர்களை தியாகம் செய்வதாகவும் கூறுவதாலும், அதற்கு அல்லாவின் பெயரால் உடன்படக்கூடியவர்களாக முஸ்லிம்களே இருப்பதாலும் ஐ.எஸ். பயங்கரவாதம் என்றதும் முஸ்லிம்கள் மீதே முழுச் சந்தேகமும் திரும்புகின்ற துரதிஷ்டவசமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்த சந்தர்ப்பத்தில் கடந்த கால வன்முறைகளுக்கு முகம்கொடுத்த அனுபவங்களை மனதில் கொண்டு பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்ற தெளிவு இலங்கைப் படைத்தரப்பினரிடையே இருப்பதை உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தொடர் குண்டு வெடிப்புக்களுக்கு பின்னரான இலங்கைப் படைகளின் நடவடிக்கைகளும், விசாரணைகளும் உணர்த்துகின்றது.
அந்தக் குண்டு வெடிப்புகள் நடைபெற்று இரண்டு வாரங்கள் ஆகின்ற இக்காலம் வரை பயங்கரவாதிகளுக்கு எதிரான விசாரணைகள், தேடுதல்கள், அதுசார்ந்த செயற்பாடுகளில் படையினர் குழப்பமற்று ஒரு நேர்த்தியான பாதையில் பயனிப்பதை உணர முடிகின்றது.
முன்னரைப் போன்று கண்மூடித்தனமாக இல்லாமல், கைது செய்யப்பட்டவர்களின் தகவல்களை நேர்த்தியாக தொடர்வதையும், குறிப்பான நபர்களையும், இடங்களையும் நெருங்குவதையும் பார்க்கின்றபோது, அனைத்து முஸ்லிம்களையும் பயங்கரவாதிகளாகப் பார்த்து அவ்வாறு அணுகி அவர்களை அச்சத்திற்குள் தள்ளிவிடாமலிருப்பதையும், ஒரு இன வன்முறை தலைதூக்கிவிடாமலிருப்பதை உறுதிப்படுத்திக்கொண்டு குற்றவாளிகளை அடையாளம் காண்பதையும் அதேவேளை படையினரின் செயற்பாடுகளால் நாட்டினதும், தமதும் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகின்றது என்ற செய்தியை நாட்டு மக்களிடையே தோற்றுவிப்பதாகவும், முடியுமானவகையில் முஸ்லிம்களின் அச்சத்தை நீக்கி அவர்களே படைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் ஒரு சூழலை ஏற்படுத்திக் கொள்வதிலும் படையினர் மிகுந்த கவனத்துடன் செயலாற்றிவருவதாகவே தெரிகின்றது.
ஐ.எஸ் பயங்கரவாதத்திற்கு எதிரான இந்த நடவடிக்கைகள் தமிழர்களிடையே சற்று மாறுபட்ட தோற்றத்தையும், கடந்த கால சாயலையும் தழுவியதாகவும் இருக்கக்கூடும்.
அதற்குக் காரணம் ஐ.எஸ் பயங்கரவாதத்தையும், அதன் மனிதப் படுகொலைகளையும் நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், அதை தோற்கடிக்கச் செய்ய தாமும் பங்களிப்பை வழங்குவோம் என்று முஸ்லிம் தலைமைகளும், முஸ்லிம் மத அமைப்புகளும், முன்வந்திருப்பதைப்போன்று, தமிழர்களின் தரப்பில் படுகொலைகளுக்கு எதிராகவும், வன்முறை அல்லது பயங்கரவாத செயற்பாட்டுக்கு எதிராகவும் எவரும் கருத்துக்களை முன்வைக்கவில்லை.
ஆகையால் தமிழர்களிடையே வன்முறையை போராட்ட யுக்தி என்று ஏற்றுக்கொண்டும், மனிதப் படுகொலைகளை மாற்று இனத்தவன் அல்லது மாற்று இயக்கக்காரன் என்றும் நியாயப்படுத்தியும் பெரும்பாலனவர்கள் இருந்துவிட்டதால் பாதுகாப்புத் தரப்பின் எதிர்வினையும், அது சார்ந்த நடவடிக்கைகளும் தமிழர்களுக்கு சற்று வேறுபட்டதாகவே இருக்கக் கூடும்.
மதத்திற்கு முழுக்க கட்டுப்பட்ட சமூகமாகவும் அதற்காக எதையும் செய்வதற்கு கட்டாயப்படுத்தப்படும் இனமாகவும் இஸ்லாமியர்கள் இருந்தாலும் அவர்களில் பெரும்பாலானவர்கள் ஐ.எஸ் பயங்கரவாதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகையால் முஸ்லிம்களை எதிரியாகப் பார்த்து ஒதுக்கிவிட்டால் அத்தகைய சூழல் பயங்கரவாதிகளுக்கே சாதகமாக அமையும், பயங்கரவாதிகள் எதிர்பார்ப்பதையும், விரும்புவதையும் அரசு செய்துவிடக்கூடாது.
பயங்கரவாதிகள் எதை எதிர்பார்ப்பார்கள் அல்லது எதை விரும்புவார்கள்? என்று சிந்தித்தால், முழு முஸ்லிம்களையும் அரசு பயங்கரவாதிகளாகப் பார்ப்பதையும், அவர்களுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதையுமேயாகும். அவ்வாறான நிலைமை ஏற்பட்டால், பாதிக்கப்பட்ட முஸ்லிம்களிடம் சென்று ‘உங்களுக்கு எதிராக செயற்படுபவர்களுக்கு எதிரான நீங்கள் போராட முன்வரவேண்டும் என்றும் அல்லது உங்களின் விடுதலைக்காக போராடும் தமக்கு சமூகத்தின் பெயராலோ, மதத்தின் பெயராலோ, அல்லாவுக்காகவோ நீங்கள் பங்களிப்புச் செய்ய வேண்டும் என்று பிரசாரங்களை முன்னெடுப்பதற்கும், உணர்ச்சிவசப்படக்கூடிய இளைஞர், யுவதிகளை தற்கொலையாளிகளாக தயார் செய்வதற்கோ வாய்ப்பாகிவிடும்.
எனவே பயங்கரவாதிகளை தோல்வியடையச் செய்வதில் முதற்காரியமாக அவர்களுக்கு மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கச் செய்யாதிருப்பதும், அவர்களை மக்களிடமிருந்து தூரப்படுத்துவதும் மிக முக்கியமான காரியங்களாகும், அதேவேளை சமாந்தரமாக இடைவெளி கொடுக்காத படை நடவடிக்கைகளும் அவசியமாகும்.
ஐ.எஸ் பயங்கரவாதம் முழு நாட்டுக்கும் அச்சுறுத்தலாக மாறியுள்ள அதேவேளை ஐ.எஸ் பயங்கரவாதத்துக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்கப்போவதாக கூறிக்கொண்டு அமெரிக்கா, இந்தியா போன்று வேறு நாடுகளும் இலங்கையில் முகாமிட்டுள்ள நிலைமையானது இலங்கை மக்களுக்கு ஆபத்தாகவே முடியும்.
பயங்கரவாதிகளை அழிக்கப்போவதாக அமெரிக்கா கால்பதித்த எந்த நாட்டிலும் முழுமையான அமைதி ஏற்பட்டது கிடையாது. மாறாக பெரும் மனித அழிவுகளே நடந்தேறியுள்ளன.
அவ்வாறான மனிதப் பேரவலங்கள் இலங்கையிலும் இடம்பெறாதிருப்பதை உறுதி செய்வதும் மிக முக்கியமாகும். இல்லாவிட்டால் சர்வதேச நாடுகளும், ஐ. எஸ் பயங்கரவாதமும் சண்டைபோடும் போர்க்களமாக இலங்கை மாறிவிட்டால், அவர்களின் சண்டையில் இழப்புக்களையும், அழிவுகளையும் இலங்கை மக்களே அனுபவிக்கவேண்டிய துர்பாக்கியமான நிலையே இலங்கை மக்களின் எதிர்காலமாகிவிடக்கூடும்.
-
இலங்கையின் தேசிய நெருக்கடியில் தமிழர்களின் வகிபாகம் என்ன?
இலங்கையின் தேசிய பாதுகாப்பு தொடர்பாக தமிழ் மக்கள் ...
-
அரசை பாதுகாக்கும் வலிமையிருந்தும் தமிழருக்கு பயன் ஏதுமில்லை
2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் எதிர்பார்த்...