இலங்கை சிறையிலிருந்து விடுதலையான மீனவர்கள் தாயகம் திரும்பினர்
அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 16 பேர் தமது சொந்த ஊருக்குச் சென்றடைந்துள்ளனர்.
இலங்கையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட 16 தமிழக மீனவர்களும், நேற்று (புதன்கிழமை) மாலை தமிழக மீன்வளத்துறை உதவி பணிப்பாளரின் உதவியுடன் மதுரையை சென்றடைந்துள்ளனர்.
இராமேஸ்வரத்தில் இருந்து மூன்று படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற குறித்த 16 மீனவர்களும், கடந்த 5ஆம் திகதி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட 16 பேரும் யாழ். சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அண்மையில் நிபந்தனையின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டனர்.
தமிழகத்தை சென்றடைந்த மீனவர்கள், இலங்கையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள தமது படகுகளும் விரைவில் விடுவிக்கப்பட வேண்டும் என கோரியுள்ளனர்.
கச்சதீவு இலங்கையில் கட்டுப்பாட்டிற்குள் சென்றது முதல், இலங்கை அரசாங்கம் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையில் விதிக்கப்பட்டுள்ள எல்லையை தாண்டி, தமிழக மீனவரகள் மீன்படிக்க கூடாது என்னும் நிபந்தனையை விதித்துள்ளது.
ஆயினும் நிபந்தனையை மீறி இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் மீன்பிடிப்பதும், அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதுமான சம்பவங்கள் வருடங்கள் பல கடந்தும் தொடர்கின்றன.
இந்நிலையில், இரு நாட்டு மீனவர்கள் பிரச்சினையையும் தீர்ப்பதற்கு, தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
எனினும் குறித்த பிரச்சினைக்கு எந்தவித தீர்வும் எட்டப்படாமல் தொடர்கின்ற நிலையில், ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்த 16 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இந்தவாரமும் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.