இலங்கை தொடர் குண்டுவெடிப்பு: தமிழ்நாட்டில் உச்ச பாதுகாப்பு!

இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்களை அடுத்து, தமிழக கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கடல் மார்க்கமாக தீவிரவாதிகள் ஊடுருவலாம் என்ற அச்சத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்திய உள்துறை அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கையை அடுத்து, அங்கு பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அவ்வகையில், தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் தமிழக பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
மர்மமான படகுகள் மற்றும் மர்மப் பொருட்கள் குறித்தும் சந்தேகத்திற்கிடமான நபர்கள் தொடர்பாகவும் இந்திய கடலோர காவற்படையினர் சோதனைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்த செயற்பாடு 24 மணித்தியாலங்களும் முன்னெடுக்கப்படுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, சென்னையில் அமைந்துள்ள இலங்கை தூதரகம், இலங்கையுடன் தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், மத ஸ்தலங்களுக்கும் விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.