இளம்பெண் கொடூரக் கொலை – பங்களாதேஷில் போராட்டம் வெடித்தது!

பங்களாதேஷில் பாலியல் துன்புறுத்தல் கொடுத்த ஆசிரியருக்கு எதிராக வழக்குத் தொடுத்த பெண்ணை தீயிட்டு எரித்துக் கொலைச் செய்த பயங்கர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்நிலையில், குறித்த பெண்ணை கொலை செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கும்படி பங்களாதேஷ் முழுவதும் தொடர் போராடங்களை பெண்கள் முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, இந்தக் கொலையில் தொடர்புடையவர்கள் அனைவரும் தண்டிக்கப்படுவார்கள் என பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா உறுதியளித்துள்ளார்.
பங்களாதேஷில், 19 வயதான நஸ்ரத் ஜகான் ரஃபி என்ற பெண் தனது ஆசிரியர் மீது பாலியல் துன்புறுத்தல் வழக்கு கொடுத்திருக்கிறார். இதில் அப்பெண்ணுக்கு வழக்கை திரும்ப பெறுமாறு அந்த ஆசிரியர் தரப்பிலிருந்து தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நஸ்ரத் புகாரை வாபஸ் பெறாமல் இருந்து வந்திருக்கிறார்.
இந்நிலையில் அந்த ஆசிரியர் நஸ்ரத் வழக்கை வாபஸ் வாங்கவில்லை என்றால், அவரை கொலை செய்யும்படி ஆட்களை அனுப்பியுள்ளார்.
அதன்படி ஏப்ரல் 10 திகதி நஸ்ரத் வழக்கை வாபஸ் பெற மறுத்தததால் அவர் மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்கப்பட்டார். இதில் 80 வீத தீக்காயம் ஏற்பட்ட நிலையில் நஸ்ரத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக அந்நாட்டு பொலிஸார் 17 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து, நஸ்ரத்தை கொலை செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கும்படி நாடு முழுவதும் தொடர் போராடங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.