ஈரானின் ஏவுகணைத் தாக்குதல்: கனேடிய துருப்புக்களுக்கு என்ன ஆனது?

ஈராக்கிலுள்ள அமெரிக்கப் படையினரின் தளங்களை இலக்குவைத்து ஈரானினால் மேற்கொள்ளப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களில் கனேடியத் துருப்புக்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் தாக்குதலுக்கு இலக்கான எர்பில் விமானத் தளத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புக்கு எதிரான அமெரிக்கா தலைமையிலான கூட்டணியில் கனேடியத் துருப்புக்களும் அங்கம் வகிக்கின்றன.
இந்நிலையில் குறித்த விமானத் தளத்தில் கனேடியத் துருப்புக்களோ அல்லது பணியாளர்களோ பாதிப்புக்குள்ளாகவில்லை என கனடாவின் பாதுகாப்புப் படையின் தலைவர் ஜெனரல் ஜொனதன் வான்ஸ் தனது ருவிற்றர் பக்கத்தில் இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஈரானினால் மேற்கொள்ளப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களில் 80 அமெரிக்கப் படையினர் உயிரிழந்துள்ளதாக ஈரான் அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரானின் புரட்சிகர காவல்படையணியை மேற்கோள்காட்டி இந்த தகவலை ஈரானின் அரச தொலைக்காட்சி வெளியிட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
குறித்த விமானத் தளங்கள் மீது 15 ஏவுகணைகள் செலுத்தப்பட்டதாகவும் அதில் ஒன்று கூட இடைமறித்து சுட்டுவீழ்த்தப்படவில்லை எனவும் அந்தச் செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் அமெரிக்க ஹெலிகொப்டர்கள் மற்றும் இராணுவத் தளபாடங்களும் சேதமடைந்துள்ளதாக ஈரானின் அரச தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
மேலும் 100 இலக்குகளை இனங்கண்டுள்ளதாக தெரிவித்துள்ள ஈரான், அமெரிக்கா பதில் தாக்குதலை மேற்கொண்டால் அந்த இலக்குகள் தாக்கப்படலாம் என தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உத்தரவின்படி, அண்மையில் பாக்தாத்தில் நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் ஈரானின் முக்கிய தளபதியான காசிம் சோலெய்மனி கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் அரச தொலைக்காட்சி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
CAF families: I can assure you that all deployed CAF personnel are safe & accounted for following missile attacks in Iraq. We remain vigilant.
— General Jonathan Vance (@CDS_Canada_CEMD) January 8, 2020
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.