ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை அடுத்து இலங்கைக்கு வரும் முதல் அணி பங்களாதேஷ்!

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பின் பின்னர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதல் அணியாக பங்களாதேஷ் அணி இலங்கைக்கு வருகை தரவுள்ளது.
பாதுகாப்பு உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளதை அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச தொடரில் பங்கேற்கவுள்ளதாக இன்று (திங்கட்கிழமை) பங்களாதேஷ் கிரிக்கெட் சபை உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களைத் தொடர்ந்து இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்க்கு பங்களாதேஷ் அணி மறுத்தது. இருப்பினும், இலங்கை கிரிக்கெட் சபை அவர்களுக்கு அதிக பாதுகாப்பு அளிப்பதாக உறுதியளித்ததை அடுத்து இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
“இந்த சுற்றுப்பயணத்திற்கு அவர்கள் வழங்கிய பாதுகாப்பு உத்தரவாதத்தை அடுத்து நாம் மகிழ்ச்சியடைகின்றோம். எங்கள் பாதுகாப்புக் குழுவிலிருந்து சாதகமான முடிவுகளைப் பெற்ற பின்னர், இலங்கை சுற்றுப்பயணத்தை மேற்கொள்ள முடிவு செய்தோம்” என பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் தலைமை நிர்வாகி நிஜாமுதீன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
ஜூலை 26, 28 மற்றும் 31 ஆகிய திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட தொடருக்காக பங்களாதேஷ் அணி எதிர்வரும் ஜூலை 23 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்கின்றது.
அனைத்து போட்டிகளும் கொழும்பு ஆர் பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.