தாக்குதலையடுத்து கைதானவர்களில் 12 பேர் முக்கிய பயங்கரவாதிகள்: ஜனாதிபதி அறிவிப்பு
ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் 12 பேர் முக்கிய பயங்கரவாதிகள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற நாட்டின் பாதுகாப்பு குறித்த விவாதத்தின் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஈஸ்டர் தாக்குதலையடுத்து நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் இதுவரை தாக்குதலுடன் தொடர்புடைய 56 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தாக்குதலுடன் தொடர்புடையவர்களுடையது என சந்தேகிக்கப்படும் 41 வங்கிக் கணக்குகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அவற்றை அரச சொத்தாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி கூறினார்.
இவ்வாறாக தாக்குதல் தொடர்பான விசாரணைகள் ஒரு வெற்றிகரமான நிலையில் காணப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.