ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய அனைவருக்கும் பாரபட்சம் பார்க்காது தண்டனை வழங்கப்படும்- நாமல்
In இலங்கை December 6, 2020 2:25 am GMT 0 Comments 1524 by : Yuganthini
ஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணை சுமூகமாக இடம்பெற்று வருவதாகவும், இதனுடன் தொடர்புடைய அனைவருக்கும் பாரபட்சம் பார்க்காது தண்டனை வழங்கப்படும் என்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
நேற்று (சனிக்கிழமை) சபையில், நிரோஷன் பெர்ணான்டோவின் உரைக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார். நாமல் ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக எதிரணியினருக்கு தற்போது இருக்கும் அக்கரை, அன்றே இருந்திருந்தால் இத்தனை உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருக்காது.
எதிரணியை சேர்ந்தவர்கள் தான் கொழும்பு பேராயரை வெளிப்படையாகவே விமர்சித்தார்கள். இதனை எதிரணியினர் புரிந்துக் கொள்ள வேண்டும்.
எமது அரசாங்கம் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை எந்தவொரு பக்கச்சார்பும் இன்றி தற்போது நடத்திக் கொண்டுதான் இருக்கிறது.
இதனுடன் தொடர்புடைய அனைவரும் எந்தவொரு வேறுபாடும் இன்று தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள். இது எமது பொறுப்பாகும். இதற்கு எதிரணியினரும் ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்.
பேராயரை விமர்சித்தவர்களை கூட, எதிரணியினர் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றுக்கு கொண்டுவந்துள்ளார்கள். நாம் அவ்வாறு செயற்படவில்லை.
எனவே, இந்த விடயத்தில் எமது அரசாங்கத்தை சந்தேகம் கொள்ள வேண்டாம் என நாம் கேட்டுக் கொள்கிறோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.