அடையாளம் அற்ற மனிதர்களாக அச்சம் மிகுந்த சூழ்நிலையில் தமிழர்கள்- ஸ்ரீதரன்
In இலங்கை January 11, 2021 12:27 pm GMT 0 Comments 1569 by : Yuganthini

அடையாளம் அற்ற மனிதர்களாக தமிழர்களாகிய நாம் மாறப்போகிறோமா என்ற அச்சம் மிகுந்த சூழ்நிலையில் தமிழர்கள் வாழ்வதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர் “மிகமுக்கியமாக இன்றைய காலகட்டம் என்பது எல்லோருக்குமே ஒரு அச்சம் மிகுந்த சூழ்நிலையைத் தந்திருக்கிறது. இன்று என்ன நடக்கிறது, நாளை அல்லது நாளை மறுதினம் என்ன நடக்கும் என்ற கேள்விகளோடு நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
அடையாளத்தைத் தொலைத்த மனிதர்களாக அடையாளம் அற்ற மனிதர்களாக நாம் வாழவேண்டிய காலம் வருமோ அல்லது யார் யாரெல்லாம் எப்படி எம்மை ஆளப்போகிறார்கள் என்கிற அச்சம் மிகுந்த சூழ்நிலையில்தான் நாம் இருக்கிறோம்.
இவ்வேளையில், நான் இளைஞர்களைக் கோருவது இந்த மண்ணில் நாம் தமிழ் தேசிய இனமாக எங்கள் அடையாளத்தைத் தொலைத்து விடாமல் நிமிர்ந்து வாழ்கின்ற இனமாக, உணர்வுகள் சூழ்ந்த இனமாக இந்த மண்ணிலே நாம் வாழவேண்டும்.
நேற்றுக்கூட, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் மாணவன் ஒருவர் யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார். அந்த மாணவனிடம் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு ‘உணர்வு என்பது உள்ளத்தில் மட்டும் இருந்து வந்தால் போதுமானது தாய், தந்தையிரிடம் கேட்கவேண்டும் என்று நான் யோசிக்கவில்லை. இங்கே எனது இனம் அழிக்கப்படுகிறது. என் இனத்தின் அடையாளங்கள் தொலைக்கப்படுகிறது அதனால் இந்தப்போராட்டத்தில் குதித்து இருக்கின்றேன்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்தச் செய்தியெல்லாம் நாங்கள் இன்னும் இன்னும் எத்தனையோ இடர்களை சந்திக்கப் போகின்றோம். சிங்கள, பௌத்த அரசுகளால் சூழப்பட்டுள்ள இந்த நிலை மிகப்பெரிய கேள்விகளை எங்கள் முன்னால் வைத்திருக்கிறது. இவற்றுக்கெல்லாம் அஞ்சாது சோரம் போகாதவர்களாக வாழவேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.