உத்தராகண்ட் வெள்ளப்பெருக்கு: 15ஆவது நாளாக தொடரும் மீட்பு பணிகள்
In இந்தியா February 21, 2021 8:43 am GMT 0 Comments 1157 by : Yuganthini

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் 15ஆவது நாளாக இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்று வருகிறது.
உத்தரகாண்ட் மாநிலம், சமோலி மாவட்டத்தில் கடந்த 7ஆம் திகதி, நந்தா தேவி பனிப்பாறையின் ஒரு பகுதி உடைந்து விழுந்ததால், அலக்நந்தா, தாலிகங்கா ஆறுகளில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கரையோர வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன. அங்கிருந்த நீர் மின்நிலையம் முற்றிலும் சேதமடைந்தது.
தேசிய அனல்மின் கழகத்துக்கு சொந்தமான தபோவன்- விஷ்ணுகாட் சுரங்கத்தில் சேறும், இடிபாடுகளும் குவிந்ததால், உள்ளே வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.
அவர்களை மீட்க கடந்த 10 நாட்களுக்கு மேலாக இந்தோ- திபெத் எல்லை படை, தேசிய பேரிடர் மீட்புப்படை, மாநில பேரிடர் மீட்புப்படை ஆகியவற்றை சேர்ந்த வீரர்கள் போராடி வருகிறார்கள்.
சுரங்கத்திலும் மீட்புப்பணிகள் தொடர்ந்து 15ஆவது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தபோவன்-விஷ்ணுகாட் இடத்திலிருந்து மேலும் இரண்டு உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இதுவரை 67 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமை அதிகாரி அசோக் குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் 137 பேர் இன்னும் காணவில்லை என்றும் அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது என்றும் கூறப்படுகிறது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.