உருமாறிய புதிய கொரோனா வைரஸ் தொற்றால் அதிக உயிரிழப்பு!
In இங்கிலாந்து January 23, 2021 6:35 am GMT 0 Comments 1728 by : Anojkiyan

பிரித்தானியாவில் பரவி வரும் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் தொற்றால் அதிகமான உயிரிழப்பு ஏற்படுமென எச்சரிக்கப்பட்டுள்ளது.
புள்ளிவிபரங்களில் இருந்து நடத்தப்பட்ட முதல் கட்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், பிரித்தானியாவில் மக்களுக்கு வழங்கப்பட்டு வரும் பைஸர், ஒக்ஸ்போர்ட் நிறுவனங்களின் தடுப்பூசிகள் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸுக்கு எதிராக வீரியமாகச் செயற்பட்டு வருகின்றன.
இந்த உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் முதலில் தென் கிழக்கு இங்கிலாந்தில் உள்ள கென்ட் மாகாணத்தில் கண்டறியப்பட்டது.
ஆனால், அடுத்த சில வாரங்களில் இந்த வைரஸ் அதிவேகமாக நாடு முழுவதும் பரவியது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளை ஆய்வு செய்தபோது, ஏற்கெனவே இருக்கும் கொரோனா வைரஸ் ஏற்படுத்தும் பாதிப்பைவிட கூடுதல் பாதிப்பையும் உயிரிழப்பையும் ஏற்படுத்தக்கூடியது எனத் தெரியவந்தது.
அதேசமயம், பிரித்தானிய அரசாங்கம் மக்களுக்குச் செலுத்திவரும் இரு தடுப்பூசிகளும் பழைய மற்றும் உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸுக்கு எதிராக வீரியமாகச் செயற்பட்டு வருகின்றன என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆதலால், உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். ஏற்கெனவே இருந்த கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் 1000 பேரில் 10 பேர் உயிரிழந்திருந்தால், புதிய உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸால் 13 பேர் உயிரிழக்க நேரிடும்.
ஏற்கெனவே தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், கொரோனாவில் பாதிக்கப்பட்டு மீண்டவர்கள் ஆகியோருக்கு உடலில் புதிய எதிர்ப்பு சக்தி உருவாகியிருக்கும். அவர்களுக்கு உருமாற்றம் அடைந்த வைரஸால் பாதிப்பு ஏற்படுவது குறைவாக இருக்கும். இதுவரை பிரித்தானியாவில் 54 இலட்சம் பேருக்கு ஒக்ஸ்போர்ட், பைஸர் தடுப்பூசி மருந்துகளின் முதல் டோஸ் போடப்பட்டுள்ளது’ என கூறினார்.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.