உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரிலிருந்து இரண்டு வீரர்கள் விலகல்!
கிரிக்கெட் இரசிகர்களே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் இன்னமும் 22 நாட்களில் ஆரம்பமாகவுள்ளது.
12ஆவது அத்தியாயமாக நடைபெறவுள்ள இத்தொடர் இம்முறை, இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் இம்மாதம் 30ஆம் திகதி முதல் ஜூலை 14ஆம் திகதி வரை இரசிகர்களை கொண்டாட வைக்கவுள்ளது.
இதில் நடப்பு சம்பியன் அவுஸ்ரேலியா, இந்தியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள், பங்களாதேஷ் ஆப்கானிஸ்தான் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன
ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும். முதல் நான்கு இடங்கள் பிடிக்கும் அணி அரையிறுதிக்கு முன்னேறும். அரையிறுதிக்கு முன்னேறும்.
இத்தொடரில், 45 லீக் போட்டிகள் மற்றும் 3 வெளியேற்று போட்டிகள் என 48 போட்டிகள், சுமார் 12 நகரங்களில் நடைபெறவுள்ளன.
இந்த நிலையில், இத்தொடருக்கான 10 அணிகளின் விபரங்களும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் சில வீரர்கள் உபாதைக் காரணமாக சிலர் அணியிலிருந்து விலகியுள்ளனர்.
இதில் தென்னாபிரிக்கா அணியின் வீரரொருவரும், அவுஸ்ரேலிய அணியின் வீரரொருவரும் விலகியுள்ளனர். இவர்களின் விபரங்களை தற்போது பார்க்கலாம்,
உலகக்கிண்ண தொடருக்கான தென்னாபிரிக்க அணியில் இடம்பிடித்திருந்த வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நோர்ட்ஜ், காயம் காரணமாக உலகக்கிண்ண தொடரிலிருந்து விலகியுள்ளார்.
இலங்கைக்கு எதிரான தொடரின்போது தோள் பட்டையில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற்றுவந்த அவரை, உலகக் கிண்ண தொடர் ஆரம்பமாவதற்கு முன் காயம் சரியாகிவிடும் என நினைத்து தென்னாபிரிக்கா கிரிக்கெட் சபை, அவரது பெயரை 15 பேர் கொண்ட பட்டியலில் சேர்த்தது.
இந்நிலையில் அன்ரிச் நோர்ட்ஜ்-யின் காயம் அவர்கள் எதிர்பார்த்த அளவிற்கு குணமடையவில்லை. இதனால் அவரை அணியிலிருந்து நீக்கி பந்துவீச்சு சகலதுறை வீரரான கிறிஸ் மோரிஸ்சை உலகக்கிண்ண தொடருக்கான தென்னாபிரிக்க அணியில் தென்னாபிரிக்கா கிரிக்கெட் சபை இணைத்துள்ளது.
………
இதேபோல, உலகக்கிண்ண தொடருக்கான அவுஸ்ரேலியா அணியில் இடம்பிடித்திருந்த வேகப்பந்துவீச்சாளர் ஜெய் ரிச்சர்ட்சன் விலகியுள்ளார்.
பாகிஸ்தான் அணிக்கெதிரான போட்டியில், அவருக்குத் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளார்.
இந்நிலையில் ஜெய் ரிச்சர்ட்சனுக்குப் பதிலாக, கேன் ரிச்சர்ட்சன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதுவரை ஜெய் ரிச்சர்ட்சன் விளையாடிய 12 போட்டிகளில் 24 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
………..
உலகக் கிண்ண தொடருக்கான 10 அணிகளும் இந்த மாதம் 23ஆம் திகதிக்குள் தங்களது 15 பேர் கொண்ட இறுதிப் பட்டியலை உறுதி செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது
இதுவரை நடைபெற்ற உலகக்கிண்ண தொடரில், அவுஸ்ரேலியா 5 முறையும், மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்தியா தலா 2 முறையும், இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் தலா ஒரு முறையும் உலகக்கிண்ணத்தை வென்றுள்ளன.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.