உலகக்கிண்ண தொடரில் இங்கிலாந்துக்கு இந்தியா மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும்: மோர்கன்
உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்துக்கு இந்தியா மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் என இங்கிலாந்து அணியின் தலைவர் இயான் மோர்கன் தெரிவித்துள்ளார்.
தற்போது சிறந்த வீரர்களை கொண்டுள்ள இங்கிலாந்து அணி, ஒருநாள் தரவரிசைப் பட்டியலில் 123 புள்ளிகளுடன் முதலாவது இடத்தில் உள்ளது.
பெரும்பாலும் எதிர்வரும் உலகக்கிண்ண தொடரில் இங்கிலாந்து அணி சம்பியன் பட்டம் வெல்லும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கு இந்தியா அணி கடும் சவாலாக இருக்கும் என கூறப்படுகின்றது.
இறுதியாக இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற இந்தியா அணிக்கெதிரான ஒருநாள் தொடரில், இங்கிலாந்து அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 4-1 என கைப்பற்றியிருந்தது.
இந்த நிலையில் இதுகுறித்து மோர்கன் கூறுகையில் ‘உலகக் கிண்ணத்தை வெல்ல இங்கிலாந்துக்கு மிகப்பெரிய வாய்ப்பு உள்ளது. இதை நாங்கள் மிகவும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதற்காக எங்கள் அணியை வலுவாக கட்டமைத்துள்ளோம். அதற்காக நாங்கள் காத்திருக்க முடியாது.
நாங்கள் ஒவ்வொரு முறையும் இந்தியாவில் விளையாடும்போது, நாங்கள் வெளிநாட்டு அணியாகவே பார்க்கப்படுகிறோம். ஆனால் இந்தியா உலகின் எந்த பகுதியில் சென்று விளையாடினாலும் அது அவர்களின் சொந்த மைதான போட்டியாகவே தோன்றும்.
இந்தியா மிகப்பெரிய அணி. அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டின் அணி. அவர்களுக்கு மிகப்பெரிய அளவில் இரசிகர்கள் ஆதரவு உள்ளது.
கடந்த இரண்டு வருடத்தில் இந்தியாவுக்கு எதிராக நாங்கள் விளையாடியது மிகவும் கடினமாக தொடராக இருந்தது. இரண்டு அணிகளுக்கும் வாய்ப்பு உள்ள நிலையில் மோத இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது” என கூறினார்.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் எதிர்வரும் மே மாதம் 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர், எதிர்வரும் ஜூன் 14ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
மொத்தமாக 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில், 45 லீக் போட்டிகள் மற்றும் 3 வெளியேற்று போட்டிகள் என 48 போட்டிகள், சுமார் 12 நகரங்களில் நடக்கவுள்ளது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.