உலகக்கிண்ண தொடரில் பலம் பொருந்திய அணியாக இந்தியா களமிறங்கப் போகிறது: கங்குலி
உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில், பலம் பொருந்திய அணியாக இந்தியா களமிறங்கப் போகிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை என இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியொன்றில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
“உலகக் கிண்ண தொடருக்காக அறிவிக்கப்பட்டிருக்கும் இந்திய அணி வலிமையாக உள்ளது. கோஹ்லி தலைமையிலான அந்த அணியில் மிகச் சிறப்பாக விளையாடக் கூடிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக, டோனி, பும்ரா உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் உள்ளனர்.
இம்முறை பலம் பொருந்திய அணியாக இந்தியா களமிறங்கப் போகிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதை வைத்துப் பார்க்கும்போது உலகக் கிண்ண தொடரை இந்தியா கைப்பற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அதேவேளையில், அதை அறுதியிட்டுக் கூறும் வகையில் தற்போதைய சூழல்கள் இல்லை.
ஏனெனில், அவுஸ்ரேலியா, பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள், நியூசிலாந்து, இங்கிலாந்து என அனைத்து அணிகளுமே சமபலத்துடன் விளங்குகின்றன. குறிப்பாக பாகிஸ்தான் சமீபகாலமாக பந்துவீச்சில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
எனவே, எந்த அணி உலகக் கிண்ணத்தை கைப்பற்றப்போகிறது என்பதை தீர்மானிப்பது கடினம். இதேபோன்ற சூழல் 1992ஆம் ஆண்டு உலகக்கிண்ண தொடரின் போது நிலவியது. தற்போது மீண்டும் அத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது.
ஐ.பி.எல். உட்பட பல்வேறு போட்டிகளில் கிரிக்கெட் வீரர்கள் தொடர்ந்து விளையாடி விட்டு உடனடியாக உலகக் கிண்ண தொடரில் பங்கேற்பதால் அவர்கள் சோர்வடையக் கூடும் எனக் கருத்துகள் நிலவுகின்றன. அதை நான் ஏற்கமாட்டேன். ஐ.பி.எல். போட்டிகள் நிறைவடைந்து ஏறத்தாழ மூன்று வாரங்களுக்குப் பிறகே உலகக் கிண்ண தொடர் ஆரம்பமாகவுள்ளது
எனவே, வீரர்களுக்கு போதிய ஓய்வு கிடைப்பதில் எந்தச் சிக்கலும் இல்லை. கிரிக்கெட் மட்டுமல்ல, கால்பந்து விளையாட்டாகட்டும்; டென்னிஸ் விளையாட்டாகட்டும், வேறு எந்த விளையாட்டு போட்டியாக இருந்தாலும், அதில் பங்கேற்கும் வீரர்கள் தொடர்ந்து விளையாடிக் கொண்டே இருப்பதுதான் சிறந்தது. மாறாக, தேவையற்ற ஓய்வு அவர்களைத் தொய்வடையவே செய்யும்’ என கூறினார்.
இடக் கை துடுப்பாட்ட வீரரான சவுரவ் கங்குலி, இந்தியா அணிக்காக 311 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 11363 ஓட்டங்களை குவித்துள்ளார்.
சவுரவ் கங்குலி, 1999ஆம் ஆண்டு முதல் 2005ஆம் ஆண்டு வரை இந்தியா அணிக்காக 146 போட்டிகளுக்கு தலைமை தாங்கியுள்ளார். மேலும் 2003ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ண தொடரில் இந்தியா அணிக்கு கங்குலி தலைமை தாங்கினார்.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் எதிர்வரும் மே மாதம் 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர், எதிர்வரும் ஜூன் 14ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இதில் நடப்பு சம்பியன் அவுஸ்ரேலியா, இந்தியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள், பங்களாதேஷ் ஆப்கானிஸ்தான் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன
இத்தொடரில், 45 லீக் போட்டிகள் மற்றும் 3 வெளியேற்று போட்டிகள் என 48 போட்டிகள், சுமார் 12 நகரங்களில் நடைபெறவுள்ளது.
இதுவரை நடைபெற்ற உலகக்கிண்ண தொடரில், அவுஸ்ரேலியா 5 முறையும், மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்தியா தலா 2 முறையும், இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் தலா ஒரு முறையும் உலகக்கிண்ணத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.