உலகக்கிண்ண தொடரில் வெற்றிபெறுவதற்காகவே செல்கின்றோம்: ரஹீம்
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் கலந்துகொள்வதற்காக செல்லவில்லை வெற்றிபெறுவதற்காகச் செல்கிறோம் என பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளர் முஷ்பிகுர் ரஹீம் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், உலகக்கிண்ண தொடருக்கான திட்டம் குறித்து அவர் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘உலகக் கிண்ண தொடரில் வெற்றிபெறுவதற்காகச் செல்கிறோம், போட்டிகளில் கலந்துகொள்வதற்காக இல்லை. நாங்கள் இதனை நம்புகிறோம்.
வெளியேற்று சுற்றுகளில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். உலகக் கிண்ண தொடர் எளிதாக இருக்கும் என நான் நினைக்கவில்லை. அனைத்து அணிகளும் வலிமையானதுதான். பங்களாதேசும் மிகச்சிறந்த அணிதான்.
கடந்த சில வருடங்களில் இறுதிப் போட்டிகளில் தடுமாறியுள்ளோம். உலகக் கிண்ணம் போன்ற தொடர்களில் தாய் நாட்டிற்காக விளையாடுவதை கௌரவமாகக் கருதுகிறேன். இது, பெருமைப்படவேண்டிய விடயம். எங்கள் மீது சில எதிர்பார்ப்புகள் உள்ளன. அவற்றை நிறைவேற்ற விரும்புகிறேன்.
எங்கள் அணியில், இதற்கு முன்பு உலகக் கிண்ண தொடரில் விளையாடிய 5 வீரர்கள் உள்ளனர். மோர்டசாவுக்கு இதுதான் கடைசி உலகக் கிண்ண தொடராக இருக்கும். அவருக்கு நல்ல படியாக பிரிவு உபசரிப்பை அளிக்க விரும்புகிறோம். 7 வீரர்கள் முதன்முறையாக உலகக் கிண்ண தொடரில்விளையாட உள்ளனர். அவர்கள், கடந்த சில ஆண்டுகளாக அணியில் தொடர்ந்து இடம்பிடித்துள்ளனர். எனவே, அவர்கள் உலகக் கிண்ண தொடரில் சிறப்பாகச் செயல்படுவர்.
எங்கள் துடுப்பாட்ட வரிசை சிறப்பாகவே உள்ளது. ஸ்ட்ரைக் ரேட் என்பது மிகவும் முக்கியம் எனக் கருதுகிறேன். சம்பியன்ஸ் ட்ராபி தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக 320 ஓட்டங்களைக் குவித்தும் தோல்வியடைந்தோம். துடுப்பாட்ட வீரர்கள் 100 ஓட்டங்கள் அடித்த பின்னர் அதனை 130- 150 என மாற்ற முயற்சிக்க வேண்டும். வேகமாக பவுண்டரிகளை விளாசி, ஓட்டங்;களைத் திரட்ட முயற்சிக்க வேண்டும்.
உலகக் கிண்ணம் போன்ற தொடர்களில், வீரர்கள் தனிப்பட்ட சவால்களை எடுத்துக்கொண்டு போட்டியை வெற்றிகரமாக முடிக்க வேண்டும்’ எனக் கூறியுள்ளார்.
இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ள உலகக்கிண்ண தொடருக்கு முன்னதாக பங்களாதேஷ் அணி, அயர்லாந்து, மேற்கிந்திய தீவுகள் அணிகளுடனான முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது.
அயர்லாந்து, மேற்கிந்திய தீவுகள் மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதும், முத்தரப்பு ஒருநாள் தொடர், மே மாதம் 5ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு அவுஸ்ரேலியா மற்றும் நியூஸிலாந்தில் நடைபெற்ற உலகக் கிண்ண தொடரில், பங்களாதேஷ் அணி காலிறுதி வரை முன்னேறியமை குறிப்பிடத்தக்கது.
தற்போது சிறந்த வீரர்களை கொண்டுள்ள பங்களாதேஷ் அணி, எதிர்வரும் உலகக்கிண்ண தொடரில் முன்னணி அணிகளுக்கு அதிர்ச்சி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் எதிர்வரும் மே மாதம் 30ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர், எதிர்வரும் ஜூன் 14ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இதில் நடப்பு சம்பியன் அவுஸ்ரேலியா, இந்தியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள், பங்களாதேஷ் ஆப்கானிஸ்தான் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன
இத்தொடரில், 45 லீக் போட்டிகள் மற்றும் 3 வெளியேற்று போட்டிகள் என 48 போட்டிகள், சுமார் 12 நகரங்களில் நடைபெறவுள்ளது.
இதுவரை நடைபெற்ற உலகக்கிண்ண தொடரில், அவுஸ்ரேலியா 5 முறையும், மேற்கிந்திய தீவுகள் மற்றும் இந்தியா தலா 2 முறையும், இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் தலா ஒரு முறையும் உலகக்கிண்ணத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.